Published : 05 Apr 2014 12:21 PM
Last Updated : 05 Apr 2014 12:21 PM

சரக்கு ரயில் தடம் புரண்டது: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. ஜோலார் பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பக்ரிதக்கா கேட் பகுதியில் சரக்கு ரயிலில் 11 மற்றும் 12-வதுபெட்டிகள் தடம் புரண்டன.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே இருந்த மின் கம்பத்தின் மீது மோதி நின்றன. இதனால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன.

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே விபத்து மற்றும் தடுப்பு குழுவினர் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில்வே மின் வாரிய ஊழியர்கள் விபத்து நடந்த இடத்துக்கு உடனே சென்று மின் இணைப்பைத் துண்டித்தனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் தடம் புரண்ட அதே நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்திலும், கோவாவிலிருந்து சென்னை செல்லும் வாஸ்கோ எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே உள்ள காமேலேரிமுத்தூர் ரயில்வே கேட் அருகிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

தடம்புரண்ட சரக்கு ரயிலை ஈரோட்டைச் சேர்ந்த பிரபாகரன் இயக்கி வந்துள்ளார். ஜோலார்பேட்டை ரயில்வே வட்டார அலுவலர் சத்தியநாராயணன் அரி, நிலைய அதிகாரி ராஜா, மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஸ்ரீதர், ரயில்வே உதவி ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட ரயில்வேதுறை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதன் காரணமாக லால்பாக் எக்ஸ்பிரஸ், வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ் பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தாமத மாக புறப்பட்டு சென்றன.

ரயில் விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இரண்டு மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டதால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x