Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM
ஐஆர்சிடிசி புதிய திட்டம்
இதைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் மற்றும் ரயில்வே துறையுடன் இணைந்து, மூத்த குடிமக்களை இலவச புனிதப் பயணம் அழைத்துச் செல்வதற்கான ஒரு திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. உருவாக்கியுள்ளது. அதன்படி, 65 வயது நிரம்பிய ஆண் அல்லது பெண், யாராக இருந்தாலும் நாட்டின் முக்கிய புனிதத் தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு இலவசமாகப் போய் வரலாம். இந்துக்களாக இருந்தால் காசி, கயா, அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ், அயோத்தி, துவாரகா, சோம்நாத் ஆகிய இடங்களுக்கும் முஸ்லிம்களாக இருந்தால் அஜ்மீர், கிறிஸ்தவர்களாக இருந்தால் கோவா சென்று வர அனுமதிக்கப்படுவர்.
ஒரு ரயிலில் 1,100 பேர் வரை செல்லலாம். மாதத்துக்கு 4 தடவை புனிதப் பயணம் செல்ல முடியும். குறைந்தபட்சம் 5 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை போகலாம். பயனாளிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்வார். ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழுடன் ரயில் பயணத்துக்கான உடல்தகுதி சான்று ஆகியவற்றின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
மாவட்டந்தோறும்...
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இலவச புனிதப் பயண ரயிலை இயக்கலாம். அல்லது கன்னியாகுமரி, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களில் இருந்தும் இயக்கலாம். சிறப்பு ரயில் கட்டணம், தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கான செலவை மாநில அரசு ஏற்கும். புனிதத் தலங்களுக்கு ரயிலில் பயணிகளை அழைத்துச் சென்ற அனுபவம் ஐ.ஆர்.சி.டி.சி.க்கு இருக்கிறது. ரயில் பெட்டிகளின் தேவை குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும். மொத்தத்தில் இலவச புனிதப் பயணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. ஒருங்கிணைக்கும்.
தமிழக அரசு பரிசீலனை
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தெற்கு ரயில்வே பொதுமேலாளர், ஐ.ஆர்.சி.டி.சி. மேலாண்மை இயக்குநர், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. யோசனை தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் ஏற்கெனவே மூத்த குடிமக்களுக்கான இலவச புனிதப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்துக்கு அங்குள்ள பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு இலவச புனிதப் பயணத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT