Last Updated : 28 Jul, 2016 11:29 AM

 

Published : 28 Jul 2016 11:29 AM
Last Updated : 28 Jul 2016 11:29 AM

சிறுமியின் வயிற்றில் வளரும் 23 வார கருவை கலைக்கக்கோரும் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

மும்பை இளம் பெண்ணின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 23 வார கருவை கலைக்கக்கோரி பெண்ணின் தாயார் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மருத்துவரீதியான கருக் கலைப்பு சட்டம் 1971-ன் படி, தாயின் வயிற்றில் 20 வாரம் வரை வளர்ந்த கருவை மட்டுமே கலை க்க அனுமதி உண்டு. இருப்பினும் சிறப்பு நேர்வாகக் கருதி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மும்பை இளம் பெண்ணின் வயிற்றில் வளரும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மருத்துவத் துறையில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் வளரும் 23 வார கருவை கலைக்க அனுமதிகோரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கடந்த 13.2.2016 அன்று எனது 17 வயது மகளை, 17 வயது சிறுவன் ஒருவர் கடத்திச் சென்றார். 14.4.2016-ல் என் மகளை போலீஸார் மீட்டனர். கடத்தல், பலாத்காரம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறுவனைக் கைதுசெய்து சிறார் சிறையில் அடைத்தனர்.

தற்போது எனது மகள் கர்ப்ப மாக உள்ளார். பிரசவத்தால் ஒரு பெண்ணின் உயிருக்கு ஆப த்து ஏற்படும் எனக் கருதினால் வயிற்றில் வளரும் கருவை கலைக்கலாம் என மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 12 வாரத்துக்கு உட்பட்ட கருவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெற்றும், 12 முதல் 20 வாரத்துக்கு உட்பட்ட கருவாக இருந்தால், இரண்டு மருத்துவர்களின் ஆலோச னையை பெற்றும் கலைக்கலாம்.

எனது மகளுக்கு ஜூன் 5-ல் எடுத்த ஸ்கேன் அறிக்கையின்படி 20 வார கருவாக (தற்போது 3 வாரம் அதிகரித்துள்ளது) இருக் கும் எனக் கூறப்பட்டுள்ளது. பலாத் காரம் மூலம் உருவான கருவாக இருப்பதால் எனது மகள் மன உளைச்சலில் உள்ளார். இதனால் கருக்கலைப்பு சட்டப்படி கருவை கலைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ். விமலா விசாரித்தார். மனுதாரரின் மகள் நீதிமன்றத்தில் ஆஜரானார். அந்தப் பெண் அரசு மருத்துவர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் வளரும் 23 வார கருவை கலைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அறிக்கை அளித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள சிறுவனும் நீதிமன்றத்தில் ஆஜராகி, இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டதற்கான போட்டோவை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

உச்ச நீதிமன்றத்தின் கருக் கலைப்பு உத்தரவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x