Published : 20 Feb 2017 08:07 AM
Last Updated : 20 Feb 2017 08:07 AM

ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: கடைகளை அலங்கரிக்க தொடங்கியுள்ள உள்நாட்டு குளிர்பானங்கள் - விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் உள்ள கடைகளில் தற்போது வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை குறைக்கப்பட்டு, உள்நாட்டு குளிர்பான வகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகு, தன்னெழுச்சியாக இளைஞர்கள் பங்கேற்ற போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் விளங்குகிறது. இந்தப் போராட்டம் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தத் தால், சில தினங்களிலேயே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வரலாற்று சிறப்பு மிக்க அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. இளைஞர்களின் இந்த சாதனை, பல ஆண்டுகளாக அரசியல் பழகியவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெரினாவில் இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவது, பீட்டாவை தடை செய்வது, வெளிநாட்டு மாடுகளை ஒழிப்பது மட்டுமல்லாது, வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் குரல்கள் ஒலித்தன. இளைஞர்களின் இந்த எழுச்சி காரணமாக, மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு குளிர்பானங் களை விற்பனை செய்வதில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா அறிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளி, மற்றும் கல்லூரி நிர்வாகங்களும், தங்கள் வளாகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என அறிவித்துள்ளன.

மேலும், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டு குளிர்பான விற்பனை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு குளிர்பான வகைகள் மற்றும் பழச்சாறுகள் கடைகளை தற்போது அலங்கரித்து வருகின்றன. பல கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களே கண்ணுக்கு தென்படவில்லை.

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அழகப்பன் சாலையில் இயங்கி வரும் பிரியாணி கடை நிர்வாகி முகமது கூறும்போது, “எங்கள் கடைக்கு அதிக அளவில் இளைஞர்கள்தான் வருகிறார்கள். அவர்கள் கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்க்குமாறும், உள்நாட்டு குளிர்பானங்களை கடையில் வாங்கி வைக்குமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தற்போது உள்நாட்டு குளிர்பான வகைகளை வாங்கி வைத்துள்ளோம். ஏற்கெனவே வாங்கி வைத்து, இருப்பில் உள்ள வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் குடிநீரை மட்டுமே தற்போது விற்கிறோம்” என்றார்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜாவிடம் கேட்டபோது, “வெளிநாட்டு குளிர்பானங்களை பொதுமக்களும், வணிகர்களும் புறக்கணிக்க வேண்டும். உள்நாட்டு குளிர்பானங்கள் ஊக்கப்படுத்தப்படும்.

அதற்காக பிப்ரவரி 21-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில், வெளிநாட்டு குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்திலிருந்து வெளிநாட்டு குளிர்பானங்களை கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x