Last Updated : 30 Oct, 2014 11:38 AM

 

Published : 30 Oct 2014 11:38 AM
Last Updated : 30 Oct 2014 11:38 AM

ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் தவிப்பு: நோக்கியா ஆலை மூடலை கண்டுகொள்ளாத அரசுகள் - தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 50 கிராமங்ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலை நாளை மறுதினம் முதல் தனது உற்பத்தியை முற்றிலும் நிறுத்தவுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டதையடுத்து கடந்த 2006 முதல் நோக்கியா ஆலை செயல்படத் தொடங்கியது. வீட்டு வாசல் வரை கம்பெனி பஸ் வசதி இருந்ததால் ஏராளமான பெண்களும் பணியில் சேர்ந்தனர். உலக செல்போன் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் சரிவை சந்திக்கத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரியில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் கம்பெனி 2006 முதல் இதுவரை ரூ.21,150 கோடி வரி பாக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்து அதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நோக்கியாவை விலைக்கு வாங்கிய மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை எடுத்துக்கொள்ள மறுத்தது. எனினும் ஒப்பந்த அடிப்படையில் ஆலை நடத்தப்படும் என ஏப்ரலில் நோக்கியா கூறியது. அதேநேரம் விருப்ப ஓய்வுத்திட்டத்தையும் அறிவித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது.

இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக நோக்கியா அறிவித்தது. மைக்ரோ சாப்ட் நிறுவனம் தொடர்ந்து வேலை வழங்கும் என எதிர்பார்ப்பில் இருந்துவந்த மிச்சமிருக்கும் 851 தொழிலாளர்களும் பெரிதும் கலங்கிப்போயுள்ளனர். உதிரிபாகம் அளித்து வந்த பாக்ஸ்கான் நிறுவனமும் டிசம்பருக்குப் பிறகு இயங்காது என்று தெரிகிறது. இதில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களும் வழியின்றி தவிக் கின்றனர்.

இது தொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமரசம்) தரப்பில் விசாரித்தபோது, ‘தொழிலாளர்கள், நோக்கியா நிர்வாகம் மற்றும் அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டம் நாளை நடக்கிறது. முன்னதாக நிர்வாகமும், தொழிலாளர்களும் சுமுகமாக பேசிவிட்டு வருவதாக கூறியுள்ளார்கள். அவர்களது முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கூறும்போது, ‘இந்த ஆலைதொடர்ந்து இயங்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முழு ஈடுபாடு காட்டாதது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் தலையிட்டு ஆலையை இயங்கச்செய்தால் ஆயிரக்கணக்கான குடும்பங் களின் வாழ்வு மீண்டும் தழைக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x