Published : 30 Jan 2017 09:41 AM
Last Updated : 30 Jan 2017 09:41 AM
தமிழகத்தில் சுமார் 1,000 ஆண்டு களுக்கு முன்பே சோழர்கள் ஆட்சி யின்போது கல்லூரி பேராசிரியர் களுக்கு 15 கழஞ்சு பொன், 600 படி நெல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் தற்போதைய மதிப்பு ரூ.2.32 லட்சம். கல்வியை ஊக்கப் படுத்துவதற்காக மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டி ருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
தமிழகத்தில் கி.பி.846 முதல் கி.பி.1279 வரை என 430 ஆண்டு களுக்கு மேலாக ஆட்சி செய்த சோழர்கள், கல்விக்கு அதிக முக் கியத்துவம் கொடுத்தனர். தமிழை யும், வேத சாஸ்திரங்களையும் வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டி னர். கற்றலும் கற்பித்தலும் செம்மை யாக இருக்க வேண்டும் என்பதற் காக உண்டு உறைவிடக் கல்விக் கூடங்களை ஊக்கப்படுத்தினர். அங்கு பயிற்றுவிக்கும் குருமார் களுக்கு தாராளமாக ஊதியம் அளித்ததுடன் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையும் வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தில் உள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் இத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர் மாணவர் விகிதம்
இதுதொடர்பாக சேலம் ஆத் தூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
சோழர் காலத்தில் எண்ணாயிரம், திருப்பாதிரிப்புலியூர், திருப்பு வனை, திருமுக்கூடல், திருவாவடு துறை, திருவொற்றியூர், பாகூர் உள்ளிட்ட இடங்களில் உயர்கல்விக் கூடங்கள் இருந்ததாக கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. எண்ணா யிரத்தில் இருந்த கல்லூரியில் 3 வேதங்கள் உட்பட 11 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. இங்கு ‘பிரம்ம சாரியம்’ என்று அழைக்கப்படும் இளநிலை மாண வர்கள் 270 பேர், ‘சாத்திரம்’ என்று அழைக்கப்படும் முதுநிலை மாணவர்கள் 70 பேர் என ஒரு கல்வி ஆண்டுக்கு 340 மாணவர்கள் பயின்றுள்ளனர். பாடங்களைப் போதிக்க இளநிலைக்கு 12 பேர், முதுநிலைக்கு 3 பேர் என மொத்தம் 15 ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.
உயர்கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:20 ஆக இருக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தற்போது வலியுறுத்துகிறது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் இதைச் செயல்படுத்தி யிருப்பது வியப்பு அளிக்கிறது.
கற்றல், கற்பித்தல் திறனை மேம் படுத்தும் நோக்கில் ஆசிரியர் களுக்கு தாராளமான ஊதியம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் முறையையும் சோழர்கள் நடைமுறையில் வைத் திருந்தனர். இளநிலை ஆசிரியர் கள் தலா 3 பேருக்கு நாளொன் றுக்கு அரை கழஞ்சு (ஒரு கழஞ்சு 5.33 கிராம்) பொன், 2 குறுணி, 4 நாழி (20 படி) நெல் ஊதியமாகத் தரப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரியர் ஒருவருக்கு நாளொன்றுக்கு அரை கழஞ்சு பொன், 2 குறுணி, 4 நாழி நெல் ஊதியமாகத் தரப்பட்டது. மாதத் துக்கு 15 கழஞ்சு பொன், 600 படி நெல். அதாவது, அப்போதைய கல்லூரி முதுநிலை ஆசிரியர்கள் இப்போதைய மதிப்பில் ரூ.2,32,220 மாத சம்பளம் வாங்கியிருக் கின்றனர். தற்போது கல்லூரி பேராசிரியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் சுமார் ரூ.70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
247 ஏக்கர் நில மானியம்
இதேபோல, இளநிலை மாண வர்களுக்கு நாளொன்றுக்கு 6 படி நெல், முதுநிலை மாணவர்களில் தலா 25 பேருக்கு நாளொன்றுக்கு அரை காசு (5.33 கிராம் பொன்), 10 படி நெல் கல்வி ஊக்கப்படியாக வழங்கப்பட்டுள்ளது. எண்ணாயிரம் உயர்கல்விக் கூடத்தின் நிர்வாகச் செலவினங்களுக்காக 45 வேலி (247.5 ஏக்கர்) நிலத்தை முதலாம் ராஜேந்திர சோழன் மானியமாக எழுதி வைத்திருக்கிறான். இந்தத் தகவல்கள் அனைத்தும் எண்ணா யிரம் கோயில் கல்வெட்டு வாயி லாகத் தெரியவருகின்றன.
இவ்வாறு பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் கூறினார்.
கல்லூரி அருகில் விடுதி
‘‘தற்போது கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. சில பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் குடியிருப்புகளும் உள்ளன. இதுவும் சோழர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. அந்தக் காலத்திலேயே கல்லூரி வளாகத்தின் அருகில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுதிகள் இருந்ததையும் எண்ணாயிரம் கோயில் கல்வெட்டு தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT