Published : 13 Aug 2016 04:11 PM
Last Updated : 13 Aug 2016 04:11 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம், மல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வெங்கட்டாபுரம். இங்கு அமைந்துள்ள கல்யாணபோடி (எ) பெண்லிபோடி மலையில், கிருஷ்ணகிரி அரசுக்கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் பெ.வெங்கடேஸ்வரன், மற்றும் ஆய்வு மாணவர்கள் பாலாஜி, கார்த்திக், மஞ்சுநாத் மற்றும் செல்வமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் புதியதாக பாறை ஓவியங்கள் மற்றும் கல் ஆயுதங்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ் வரன் 'தி இந்து'விடம் கூறும்போது, ‘எழுத்தறிவு தோன்றுவதற்கு முன் கற்கால மனிதர்கள் தங்கள் எண்ணங்களை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தினர். இந்த ஓவியங்களில் அவர்கள் கண்டவற்றையும், தாங்கள் செயல்படுத்தியதையும், தங்கள் மனதிலும் நினைவிலும் நின்ற காட்சிகளையும் தங்கியிருந்த குகைகளிலும், பாறை களிலும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
தமிழகத்தில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஒவியம், கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லபாடியில் உள்ளது. இந்நிலையில், தற்போது வெங்கடாபுரத்தில் உள்ள கல்யாணபோடி (பெண்லிபோடி) மலையில் உள்ள குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓவியங்கள், காவி, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களால் ஆனவை. இவை வெவ்வேறு காலக்கட்டத்தைச் சார்ந்தவை. இவை 4000 முதல் 2500 ஆண்டுகள் வரை பழைமையானவை. இக்குகையானது வடக்குத்தெற்காக 40 அடி நீளமும் மையத்தில் 8 அடி உயரமும் கொண்டுள்ளது.
இங்குள்ள பல ஓவியத்தொகுப்புகளில், சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டுள்ள மனிதர்கள் கைகோர்த்த நிலையில் இருவரிசையில் நடனமிடும் காட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் மனிதர்கள் நடனமிடும் காட்சி இருவரிசையில் காட்டப்பட்டுள்ளது என்பது முதன் முதலாக அறியப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு வரிசைக்கு நடுவில் உதிரியாக தெளிவற்ற இரு உருவங்கள் திரட்சியாகக் காட்டப்பட்டுள்ளன. இவை வழிபாட்டுக்கு உரிய உருவங்களாகவோ அல்லது படையல் பொருட்களாகவோ அல்லது வேட்டையில் பெற்ற விலங்கினங் களாகவோ இருக்கலாம்.
இவ்வோவியத்தில் மேல் வரிசையில் 9 நடனமிடும் மனித உருவங்களும், கீழ் வரிசையில் 17 நடனமிடும் மனித உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த வகையிலும் அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் இடம் பெற்ற ஓவியமாகவும் இது திகழ்கிறது. தமிழகத்தில் 67 மனிதர்கள் இடம் பெறும் நடனக்காட்சிகள் கிடைத்துள்ளது, இவற்றுடன் ஒப்பிடுவதன் மூலம் இதன் சிறப்பை அறியலாம். மேலும் இந்நாள்வரை தமிழகத்தில் வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட நாட்டியக் காட்சிகளே கிடைத்துள்ளன. சிவப்பு வண் ணத்தில் தீட்டப்பட்ட நடனக் காட்சி கிடைத் துள்ள முதல் ஓவியமாகவும் திகழ்வதாக பெருமையுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT