Published : 07 Sep 2016 11:51 AM
Last Updated : 07 Sep 2016 11:51 AM
திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காணிகுப்பம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
சுமார் 250 வீடுகளே கொண்ட இக்கிராமத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் வயதுள்ள 45 குழந்தைகளும் இப்பள்ளியில்தான் படிக்கின்றனர். தனியார் பள்ளிகளை புறந்தள்ளிவிட்டு முன் மாதிரி பள்ளியாக இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அந்த கிராமத்து மக்கள் உருவாக்கி வருகிறார்கள் என்பதை அறிந்து அப்பள்ளிக்கு நேரில் சென்றோம்.
சிங்காணிகுப்பம் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் எளிய விவசாயிகள். வெள்ளந்தியான பேச்சோடு நம்மை வரவேற்றார்கள்.
'நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி அரசு மூலம் கிடைக்க வேண்டும்; அப்படி பெற வேண்டியது நமது உரிமை. அதே நேரம் நம்மால் ஆன உதவிகளையும் நமது ஊர் பள்ளிக்குச் செய்ய வேண்டும்' என்கிற எண்ணம் அந்த எளிய மனிதர்களிடத்தில் ஆழமாய் இருப்பதை அவர்களோடு பேசிய போது தெரிந்து கொள்ள முடிந்தது.
பள்ளியின் நுழைவாயிலில் காந்தி சிலை; அதன் அருகே அழகாய் ஒரு கொடிக் கம்பம். பள்ளிச் சுவற்றில் அப்துல்கலாமின் பொன்மொழிகள், மாணவ, மாணவியருக்கு தனித்தனி சுகாதாரமான கழிவறைகள், அதன் அருகில் 'வாஷ் பேசின்', குடிநீர் குழாய்கள் என்று பள்ளி வளாகம் தூய்மையாக காட்சியளிக்கிறது.
கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுடன் ஒரு தொடக்கப்பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் அந்தப் பள்ளி இருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாக கூட இருந்தது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆர். மீனாட்சிசுந்தரம், ஆசிரியராக பி. கதிரவன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளி பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழரசி முருகன் ஆகியோர் கூறியது:
தனியார் பள்ளிக்கு கொட்டி கொடுக்கும் பணத்தில் சிறிதளவு தொகையை இந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியின் வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் செலவழிக்கிறோம். இதற்கான தொகையை பெற ஊர்கூட்டம் போட்டு ஒரு வீட்டுக்கு இவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்து அந்தப் பணத்தை கொண்டு பள்ளிக்கு செலவழிக்கிறோம்.
தற்போது 5 ம் வகுப்பு வரை இப்பள்ளி உள்ளது. எங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் படிக்க வைப்பதை பெருமையாக எண்ணுகிறோம். எங்களின் ஊக்கத்தினால் பணியாற்றும் ஆசிரியர்கள் முழுமையாக கற்றுத் தருகின்றனர். ஒருநாள் எங்கள் குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்றாலும் எங்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிகிறார்கள்.
பள்ளியைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்கிறோம். தற்போது எங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் மட்டுமே வழங்கப்படாமல் உள்ளது. அதற்காக ஊர் கூட்டம் போட்டு பேசியுள்ளோம். வீட்டுக்கு வீடு வசூல் செய்து அதையும் விரைவில் அமைத்து விடுவோம். நாங்கள் அரசை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த தொடக்கப் பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியரே உள்ளனர். சமயத்தில் ஒருவர் விடுமுறையில் சென்றால் இன்னொருவர் மொத்தம் உள்ள 5 வகுப்புகளுக்கும் பாடம் எடுக்க வேண்டிய நிலையே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் சில கிராமங்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதும், அந்தப் பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதும் வழக்கம். அதே வழக்கம் சிங்காணிகுப்பம் கிராம தொடக்கப் பள்ளியிலும் இருந்து வருகிறது. இந்த பற்றாக்குறையைப் போக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூடுதலாக ஒரு பெண் ஆசிரியரை நியமித்து ஊதியம் வழங்கி வருகிறார்கள் இக்கிராம மக்கள்.
இந்த கிராமத்தில் இயங்கி வரும் 'அப்துல்கலாம் சேவை மையம்' மூலம் 'ப்ளஸ் டூ படித்த பின்பு என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டும் கூட்டம் நடத்த இருப்பதாக இங்குள்ள இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்காக ஆண்டு விழா நடத்தி மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள் இந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள். கிரா மத்தை சுற்றி படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை இளைஞர்கள், மாணவர்களுடன் இணைந்து விரைவில் அகற்ற உள்ளோம் என்கின்றனர் பெரியவர்கள்.
இந்த தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கேட்டதற்கு, “30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி கடந்த கல்வி ஆண்டு முதல் சிங்காணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் கூடுதல் சேர்க்கையின்போது நிச்சயம் அதற்கேற்ப கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள்'' என்கின்றனர்.
விதிமுறைப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சொல்லும் கருத்து நியாயமானதுதான். ஆனால் இத்தனை ஆர்வமாய் ஒரு கிராம மக்களால் ஒரு தொடக்கப் பள்ளி நல்லவிதமாய் எடுத்துச் செல்லப்படும் போது விதிகளைத் தளர்த்தி கூடுதலாய் ஒரு ஆசிரியர்களை நியமிக்கலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT