Published : 27 Mar 2017 12:24 PM
Last Updated : 27 Mar 2017 12:24 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் விளைச்சலும் பாதிக்கப்பட்டு, விலையும் இன்றி மிளகாய் விவசாயிகள் தவித்து வருகின்றனர். அரசு ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர். விளாத்திகுளம் பகுதியில், மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் விளையும் குண்டு மிளகாய், தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. விளாத்திகுளம், புதூர் பகுதியில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி மிளகாய் சாகுபடி, ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால், மானாவாரி மிளகாய் விளைச்சல் அறவே இல்லை.
தோட்ட பாசனம்
அதேநேரம் தண்ணீர் வசதியுள்ள தோட்ட பாசன நிலங்களில் மட்டும், விவசாயிகள் சம்பா மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். நாலாட்டின்புத்தூர், காமநாயக்கன்பட்டி, கடலையூர், எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டப் பாசன நிலங்களில், சுமார் 10 ஆயிரம் ஏக்கரில், கடந்த 3 மாதங்களுக்கு முன் விவசாயிகள் சம்பா மிளகாய் பயிரிட்டனர்.
அந்த பகுதிகளில் தற்போது மிளகாய் சாகுபடிக்கு வந்துள்ளது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 5 குவிண்டால் வரை மட்டுமே விளைச்சல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக மதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் அ.வரதராஜன் கூறும்போது, “இந்த ஆண்டு மானாவாரி குண்டு மிளகாய் சாகுபடி அறவே இல்லை. தோட்ட பாசன நிலங்களில் மட்டும் விவசாயிகள் சம்பா மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். அடி உரமிட்டு, நாற்று நட்டு, மேல் உரமிட்டு, 4 முறை மருந்து தெளித்து தற்போது மிளகாய் பழம் பலனுக்கு வந்துள்ளது. வாரம் 1 நாள் வீதம், 5 முறை மிளகாய் பழம் பறிக்கப்படும்.
இந்த பகுதிகளில் தோட்ட பாசன நிலங்களில் கடந்த காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடின்றி செடிகளுக்கு பாய்ந்ததால், ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் வரை மகசூல் இருந்தது. விலையும் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை இருந்தது.
திரட்சியாக இல்லை
ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 5 குவிண்டால் வரை தான் மகசூல் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் சரியாக பாய்ச்சாத காரணத்தால், வத்தல் திரட்சியாக இல்லாமல் சோடை அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள், சம்பா மிளகாய் வத்தலை குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் என்ற விலையில் தான் வாங்குகின்றனர். இந்த ஆண்டு விலையும் இல்லை, விளைச்சலும் குறைவாக உள்ளது. நாற்று நட்டது முதல் தற்போது வரை ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. சம்பா மிளகாய் வத்தலுக்கு அரசு ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT