Published : 06 Jan 2017 04:24 PM
Last Updated : 06 Jan 2017 04:24 PM
கரூரில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற 15 ஆண்டு கால இழுபறிக்கு நிகழாண்டிலாவது முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு கரூர் நகர மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக கரூர் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள், அதேபோல அப்பகுதிகளில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு செல்பவர்கள், சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருவெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்பவர்கள், அதேபோல அப்பகுதிகளில் இருந்து ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகளில் செல்பவர்கள் கரூர் பேருந்து நிலையம் வந்துதான் செல்லவேண்டும்.
நூற்றுக்கணக்கான பேருந்துகள்
தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றான கரூர் பேருந்து நிலையம் ‘ஏ’ கிரேடு அந்தஸ்து கொண்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன.
கரூர் நகரில் உள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரூருக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் கரூர் பேருந்து நிலையம் வழியாகவும், கரூர் பேருந்து நிலையத்துக்கும் வந்து செல்கின்றனர். பெருகிவிட்ட பேருந்துகள் எண்ணிக்கை, அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்க முடியாமல் கரூர் பேருந்து நிலையம் கடந்த பல ஆண்டுகளாகவே திணறி வருகிறது.
29 ஆண்டுகளைக் கடந்து
கரூர் பேருந்து நிலையம் மேற்கு பிரதட்சணம் சாலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டு நவ.24-ம் தேதி செயல்படத் தொடங்கிய இப்பேருந்து நிலையம் தற்போது 29 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது.
கரூர் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் இருப்பதால் நகரினுள் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுவதால் 2002-ம் ஆண்டு முதலே கரூர் பேருந்து நிலையத்தை புறநகருக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக சேலம் புறவழிச்சாலை பகுதி, சுக்காலியூர் பகுதிகளில் அமைக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு அதிக பேருந்துகள் நிறுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலைய மேற்கு பகுதியில் இருந்த கடைகளை அகற்றப்பட்டு பேருந்துகள் வெளியே செல்ல புதிய வழி ஏற்படுத்தப்பட்டது.
சுக்காலியூரில் அமைக்க எதிர்ப்பு
கடந்த திமுக ஆட்சியில் சுக்காலியூர் பகுதியில் புறநகரில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சேலம் புறவழிச்சாலையில் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் புறநகரான சுக்காலியூரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின.
புறநகரில் பேருந்து நிலையம் அமைத்தால் வெளியூர்களில் இருந்து கரூருக்கு வேலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அங்கிருந்து நகரத்துக்கு வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இருக்காது, கடைகள் இருக்காது என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
திருமாநிலையூர் தேர்வானது
அதன்பின் அதிமுக அரசின் கடந்த ஆட்சிக்காலத்தில் கரூர் திருமாநிலையூர் பகுதியில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவற்றை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அனைத்திலும் வெற்றிப்பெற்று புதிய பேருந்து நிலையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) அரசுக்கு அனுப்பட்ட நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பால் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இப்படியே 15 ஆண்டுகளாக இழுபறியாகவே இருக்கும் கரூர் நவீன பேருந்து நிலையத்தை தாமதமின்றி நிகழாண்டிலாவது அமைத்து பேருந்து நிலையம் மற்றும் நகரினுள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், நகரினுள் பேருந்துகள் வருவதால் ஏற்படும் விபத்துகள் கட்டுப்படுத்த வேண்டும் என கரூர் நகர மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் கூறியது:
கரூரில் புதிய பேருந்து நிலையம் கண்டிப்பாக அமைக்கவேண்டும். இதன் மூலம் நகரினுள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதுடன், புதிய பேருந்து நிலையம் நகரின் வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
இதன் மூலம் நகரம் விரிவடைவதுடன் அப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படும். அதனால் கரூரில் எந்த இடத்திலாவது புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கரூர் நகராட்சி ஆணையர் ப.அசோக்குமாரிடம் கேட்டபோது,
“கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலைய திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றார்.
மினி பேருந்து நிலையத்தை இணைத்து விரிவுபடுத்தலாம்
பெயர் வெளியிட விரும்பாத கரூர் நகர்மன்ற முன்னாள் பிரதிநிதி கூறியது:
15 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து நிலையத்தை மாற்றவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் கடன் வாங்கவேண்டும். அதனை வட்டியுடன் அடைக்கவேண்டும். தற்போதுள்ள பேருந்து நிலையம் மூலம் வரும் வருவாயை இழக்கவேண்டி இருக்கும். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். நகரினுள் பேருந்து நிலையம் இருப்பதால் மக்கள் அனைத்து பொருட்களையும் எளிதில் வாங்க இயலுகிறது. வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் போது இங்குள்ள பாதுகாப்பு அங்கு இருக்காது. பொதுமக்கள் பேருந்தை விட்டு இறங்கியவுடன் கடைவீதிக்கோ, தங்கள் அலுவலகங்களுக்கோ செல்ல முடியாது. அதற்கு நகர பேருந்தை பிடித்து நகருக்குள் வரவேண்டும். எனவே, தற்போதைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்து தவிர இதர வாகனங்கள் பேருந்து நிலையத்துக்குள் வருவதற்கு தடை விதித்து, தேவைப்பட்டால் மினி பேருந்து நிலையத்தை இணைத்து பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தலாம்.
கரூரில் புதிய பேருந்து நிலையம் கண்டிப்பாக அமைக்கவேண்டும். இதன் மூலம் நகரினுள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதுடன், புதிய பேருந்து நிலையம் நகரின் வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT