Published : 15 Feb 2014 10:00 AM
Last Updated : 15 Feb 2014 10:00 AM

சென்னை: பஸ் கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை- புகைப்படம் எடுத்தவரை மிரட்டவும் செய்தனர்

பஸ்ஸின் கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை புகைப்படம் எடுத்த பத்திரிகை புகைப்படக்காரரை தாக்கவும் முயன்றனர்.

சென்னை திருவான்மியூரில் இருந்து சுங்கச்சாவடி செல்லும் மாநகரப் பேருந்து (தடம் எண் 1ஏ) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ராயப்பேட்டையை கடந்து வந்தது. அப்போது ராயப்

பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் அந்த பேருந்தில் ஏறினர். பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே அவர்கள் வழக்கமான சேட்டைகளை தொடங்கினர். பேருந்தின் பக்கவாட்டில் தட்டி பாட்டு பாடியவர்கள், ‘காதலர் தின வாழ்த்துகள்’ என்று கத்திக் கொண்டே இருந்தனர். பேருந்து அண்ணா சாலைக்கு வந்தபோது 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி கல்லூரியின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். கூரை மீது ஏறியவர்களை கீழே இறங்குமாறு ஓட்டுநரும் நடத்துநரும் பலமுறை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

பேருந்தை தட்டி ஓசை எழுப்பி, கூச்சலிட்டு, பேருந்தின் கூரை மீது ஏறி மாணவர்கள் செய்த ரகளைகளால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். அண்ணா சிலை அருகே பேருந்து வந்தபோது எல்லீஸ் சாலை சுரங்கப்பாதை அருகே நின்று கொண்டிருந்த ஒரு பத்திரிகை புகைப்பட நிபுணர், மாணவர்களின் அடாவடித்தனங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்தார்.

இதைப் பார்த்த மாணவர்கள் சிக்னலில் பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி அவரை அடிக்க முற்பட்டனர். புகைப்படக்காரரை சூழ்ந்து கொண்டு அவரது கேமராவை பறிக்க முயன்றனர்.

பின்னர் "உனது பெயர் என்ன? எங்கு வேலை செய்கிறாய், எங்கள் புகைப்படம் பத்திரிகையில் வந்தால் உன்னை தேடி வந்து அடிப்போம்" என்று மிரட்டியுள்ளனர்.

அந்த புகைப்படக்காரர் தன்னை மிரட்டிய மாணவர்களையும் அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்தார்.

பேருந்தின் கூரை மீது ஏறி நின்ற மாணவர்களை அண்ணா சிலை சிக்னல் அருகே இருந்த போக்குவரத்து காவல் துறையினர் எச்சரித்ததை தொடர்ந்து கூரையில் இருந்து இறங்கி பேருந்துக்குள் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x