Published : 02 Jan 2016 04:11 PM
Last Updated : 02 Jan 2016 04:11 PM
தன் எளிமையை உலகுக்கு உணர்த்த மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் இயேசு கிறிஸ்து. ஆனால், அண்மைக்காலமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அந்த குடில் அமைக்கவே பல லட்சங்கள் செலவு செய்யப்படுகிறது. இதற்கு போட்டிகளும் நடத்தப் படுகிறது.
இதில் இருந்து வேறுபட்டு, குடில் அமைக்கும் பணத்தில், ஏழை மாற்றுத்திறனாளிக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளனர், கன்னியாகுமரி மாவட்டம் வட்டம் என்ற கிராமத்தில் உள்ள அந்தோணியார் தேவாலய மக்கள். கடந்த 4 மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு அப்பகுதி மக்கள் ரூ. 100 முதல் ரூ. 20 ஆயிரம் வரை நன்கொடை வழங்கினர். மொத்தம் ரூ. 4 லட்சம் வசூலானது.
இத்தொகையில், கேரளபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாற்றுத்திறனாளியான சுரேஷ் (33) என்பவருக்கு, 240 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்டித்தரப்பட்டது. இப்போது அந்த வீட்டில் வசிக்கும் சுரேஷ் நேற்று உற்சாகமாக புத்தாண்டைக் கொண்டாடினார். முன்னதாக இந்த வீட்டை அருட்தந்தை பென்னி அர்ச்சித்தார். தேவாலய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சுரேஷூக்கு, ராஜம் என்ற மனைவியும் ரெஷ்மிதா (3), அபி (1) ஆகிய மகள்க ளும் உள்ளனர்.
சுரேஷ் கூறும்போது, “கூலித் தொழிலாளியான நான் ஈட்டும் வருமானம், குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை. இந்த வீடு எனக்கு கிடைத்த வரம்” என்றார்.
அருட் தந்தை பென்னி கூறும்போது, “எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் பணமாகவும் பொருட்களாகவும் உடலுழைப்பாகவும் செலுத்தி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த வீட்டை உருவாக்கியுள்ளனர். 35-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளில் உதவியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இனிமேல் ஆண்டுதோறும் ‘கிறிஸ்துமஸ் குடில் வீடு’ என்ற பெயரில் ஏழை ஒருவருக்கு வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT