Published : 10 Jun 2017 10:54 AM
Last Updated : 10 Jun 2017 10:54 AM
குற்றாலம் சிறுவர் பூங்காவுக்கு ரூ.5 நுழைவுக் கட்டணம் செலுத்தி குழந்தைகளுடன் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
குற்றாலம் பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழியில் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணமாக ரூ.5 குத்தகைதாரரால் வசூலிக்கப்படுகிறது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ சில ராட்டினங்கள் மட்டுமே உள்ளன.
மீன் தொட்டியில் சில மீன்களும், கூண்டில் சில வண்ணப் பறவைகளும் உள்ளன. பாம்பு காட்சியகத்தில் உள்ள தொட்டியில் பாம்பு வகைகள் எதுவும் இல்லை.
சிறு வன உயிரினங்களை பார்வையிடுவதற்காக வரிசையாக கூண்டுகள் உள்ளன. அதில் ஒரு கூண்டில் மட்டும் ஓரிரு முயல்கள் உள்ளன. மற்றவை வெறுமையாக காட்சி அளிக்கின்றன.
ஏமாற்றம்
இந்த சிறுவர் பூங்காவுக்கு அருகிலேயே குற்றாலம் பேருந்து நிலையத்துக்கு பின்புறம் விஸ்வநாதராவ் பூங்கா உள்ளது. சிறுவர் பூங்காவில் இருப்பதைவிட இங்கு அதிகமான ராட்டினங்கள், ஊஞ்சல்கள் உள்ளன.
இங்கு சுற்றிப் பார்க்கவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
ஆனால், நபருக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி, குடும்பத்துடன் சிறுவர் பூங்காவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு குழந்தைகளை மகிழ்விக்கும் எவ்வித அம்சங்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, “பூங்காவில் உள்ள கூண்டுகளை பராமரித்து, சிறு விலங்கினங்கள், பறவை வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தினால் குழந்தைகள் அவற்றைப் பார்த்து மகிழ்வார்கள். அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாத காலங்களிலும் இங்கு குடும்பத்துடன் வந்து ரசித்துச் செல்லலாம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT