Published : 30 Mar 2014 12:50 PM
Last Updated : 30 Mar 2014 12:50 PM
அச்சுறுத்தல் காரணமாக விமானத்தில் பறப்பதாகச் சொல்லும் முதல்வர் ஜெயலலிதா, அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை இனிமேல் பாடக்கூடாது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.
சிவகங்கை எம்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு தேமுதிக, அதிமுக கட்சியினர் அக்கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் தரும் வகையில் ப.சிதம்பரம் பேசியது:
பாஜகவுக்கு காவடி தூக்க தமிழகத்தில் 3 கட்சிகள் உள்ளன. பாஜகவுக்கு காவடி தூக்கமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள தேமுதிக இளைஞர்களை வரவேற்கிறேன்.
இது இளைஞர்கள் நாடு. இளைஞர்கள் கையில் நாட்டைத் தரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இளைஞர்களால் முடியாதது எதுவுமே கிடையாது. இந்த நாட்டை இளைஞர்கள் கையிலே ஒப்படைக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் 3 கி.மீ. தொலைவில் உள்ள மேடைக்கும் தனி குட்டி விமானத்தில் பயணம் செய்கிறார். தரையில் கால்பதிக்காமல் செல்லும் ஒரே முதல்வர் ஜெயலலிதாதான். அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தில் வருகிறேன் என்கிறார். அவருக்கு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அச்சுறுத்தலால் விமானம் அல்ல. நெஞ்சில் அச்சம் என்பதால்தான் விமானம். பிரதமருக்கு அச்சுறுத்தல் இல்லையா. சோனியா காந்திக்கு அச்சுறுத்தல் இல்லையா. நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது நக்சலைட் பகுதியில் பயணம் செய்தேனே, எனக்கு அச்சுறுத்தல் இல்லையா? யாருக்கு அச்சுறுத்தல் இல்லை. நெஞ்சில் அச்சமுள்ள ஜெயலலிதா, இனிமேல் அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை பாடக்கூடாது.
விஜயகாந்த்துக்கு மன்னிப்பு
விஜயகாந்த் எனக்கு நண்பர்தான். விமானத்தில் வரும்போதும், போகும்போதும் விஜயகாந்த் எனக்கு பழக்கமானவர்.
நான் சினிமா பார்ப்பதில்லை. விஜயகாந்தும் நடிப்பதை நிறுத்தி யுள்ளதாக சொல்கிறார்.
சென்னையில் பேசும்போது என்னை ஊழல் செய்துள்ளதாக பேசியுள்ளார். யாரோ பேசிய பேச்சு, விடிஞ்சா போச்சு என்பார்களே. அதுபோல் கருதி அவரை உங்கள் சார்பாக மன்னித்துவிடுகிறேன் என்றார்.
முதல்வர் குற்றச்சாட்டுகளுக்கு ஏப்.3ல் பதில் கூறுகிறேன்
காங்கிரஸ் மீதும், என் மீதும் தொடர்ந்து தமிழக முதல்வர் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு வருகிற 3-ம் தேதி சிவகங்கையில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் விரிவான பதிலை அளிக்கவுள்ளேன் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT