Published : 19 Nov 2014 08:38 PM
Last Updated : 19 Nov 2014 08:38 PM
தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய, மாநில, இலங்கை அரசிற்கும் மீனவ குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தகவல் புதன்கிழமை ஊடகங்களில் வெளியானதும் ராமேசுவரம் மீனவர்கள் குடும்பத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மீனவர்கள் விடுதலை குறித்து மீனவர்களின் குடும்பத்தின் சார்பில் மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவி இருதயமேரி கூறியதாவது,
தாய் நாட்டிற்காக போருக்கு தன் மகனை தாயார் அர்ப்பணிப்பு உணர்வுடன் அனுப்பி வைப்பாள். அது போலவே கடலுக்குச் சென்ற மகனும், போருக்குச் சென்ற மகனும் திரும்பி வருவானா என்றே தெரியாது. மீனவ தாய்மார்கள் இவ்வாறே ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகளை கடலுக்கு அனுப்பி வைக்கிறோம். இன்று எங்கள் மீனவர்கள் நிரபராதிகளாக உணரப்பட்டு தங்கள் தாயகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி இலங்கை அதிபருக்கு அப்பாவி மீனவர்களை பற்றி எடுத்துரைத்து மீனவர்களை விடுதலை செய்ய வைத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபச்ச, தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எங்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவர்களின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியும், கடமைப் பட்டிருக்கிறோம், என தெரிவித்தார்.
மேலும் விடுதலை செய்யப்பட்ட ஐந்து மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு ஆழ் கடல் மீன் பிடித்தல் படகும் அதற்கான பயிற்சியும் அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவப் பிரநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்கள் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை மதியம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT