Published : 11 Apr 2017 04:59 PM
Last Updated : 11 Apr 2017 04:59 PM

மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் நீர் நிரப்பப்படும் வறண்ட குட்டைகள்: கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்தும் வனவிலங்குகள்

வனவிலங்குகள் நீரின்றி குடியிருப்புகளுக்குள் நுழைவதை தடுக்க உருவாக்கப்பட்ட வறண்ட குட்டைகளில் நீர்நிரப்பும் ஏற்பாடு தற்போது நல்ல பயனளிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த குட்டைகளில் ஏராளமான வனவிலங்குகள் வந்து நீர் அருந்தி செல்கின்றன; இதனால் மனித வனவிலங்குகள் மோதல் குறைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

கோவை வனக்கோட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப் போனது. இதனால் கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. காட்டினுள் மரம் மற்றும் செடி கொடிகள் காய்ந்து போனதோடு வனவிலங்குகளின் நீராதாரமான வனக்குட்டைகள், நீரோடைகள் என அனைத்தும் வறண்டு விட்டன.

இதனால் உயிர்வாழ உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை போன்ற விலங்கினங்கள் காட்டை விட்டு வெளியேறி வனத்தையொட்டியுள்ள ஊர்களுக்குள் புகுந்து விடுவதால் சமீப காலமாக இப்பகுதியில் மனித - விலங்கின மோதல்கள் அதிகரித்துவிட்டன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வனத்துறை சார்பில் வன எல்லையோரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் கட்டி அதில் நீர் விடும் பணியை மேற்கொண்டனர். இதில் வனத்தை விட்டு வெளியில் வரும் சில யானைகள் நீர் அருந்தி தாகம் தணித்தாலும் இவை போதுமானதாக இல்லை.

நாளொன்றுக்கு ஒரு யானைக்கு குறைந்தபட்சம் 250 லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட யானைகளின் வாழ்விடமாக கருதப்படும் மேட்டுப்பாளையம் வனத்திற்கு இவை போதுமானதாக இல்லை. மேலும் இயல்பாகவே யானைகள் தண்ணீர் அருந்துவதோடு நீரில் இறங்கி குளித்து தன் உடலின் சூட்டை தணித்துக்கொள்வது வழக்கம். ஆனால் வனத்தில் உள்ள இயற்கையான குட்டைகள் வறண்டு விட்டதால் தற்போது நிலவும் வெப்பத்தை தாங்க இயலாமல் தவித்தன. குறிப்பாக யானைகள் ஊருக்குள் இருக்கும் கிணற்றுக்குள் விழுவது, விவசாய தொட்டிகளுக்குள் விழுவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிப் போனது.

இதனை உணர்ந்து கொண்ட வனத்துறையினர் தற்போது வறட்சியால் வறண்டு கிடக்கும் வனக்குட்டைகளில் செயற்கையாய் நீர்நிரப்ப திட்டமிட்டு வனப்பகுதியிலேயே ஆழ்குழாய் கிணறு அமைத்து மோட்டார்களின் உதவியோடு குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியினை செய்து வருகின்றனர். இதற்காக தனியாக வனப் பணியாளர்களை நியமித்து குட்டைகளில் தண்ணீர் போதுமான அளவிற்கு இருக்குமாறு கண்காணித்து வருகின்றனர். இதனால் மழை பொய்த்துபோய் விட்டாலும் செயற்கையாய் ஓரளவேனும் தண்ணீர் இருக்கும் இந்த குட்டைகளை நோக்கி யானைகள், காட்டுஎருதுகளும், மான்கள் என கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்துவதோடு கடும் வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளும் வகையில் நீரில் விளையாடி குளித்து மகிழ்கின்றன.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியபோது ''வனவிலங்குகளின் தாகத்தை அவற்றின் இயல்பான வகையிலேயே தீர்க்க திட்டமிட்டு இப்பணிகளை செய்து வருகிறோம். ஆழ்குழாய் கிணறுமூலம் குட்டைகளுக்கு நீர்நிரப்பும் பணி அடுத்த மழைக்காலம் துவங்கும் வரை நீடிக்கும்'' என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x