Published : 01 Aug 2016 11:07 AM
Last Updated : 01 Aug 2016 11:07 AM
கால்நடைகளுக்கான வைக்கோலை வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டாததால், அதை வயல்களிலே மடக்கி உழுது உரமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே நெல்லுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், வைக்கோலும் விற்பனை யாகாததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்கள்தோறும் காளை மற்றும் பசு மாடுகள் அதிக அளவில் இருந்தன. அப்போது, நெல் விவசாயம் செய்வோருக்கு, வைக்கோல் விற்பதன் மூலம் கணிசமான வருவாய் கிடைத்தது. தற்போது கால்நடைகளின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழாக குறைந்துவிட்டதாக கால்நடைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வைக்கோல் விற்பனையாகவில்லை
கடந்த காலங்களில் அறுவடைக்குப் பின் வயல்களில் குவித்துவைக்கப்பட்டிருக்கும் வைக்கோலை கால்நடை வளர்ப்போர் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கிச் செல்வர். ஒரு ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெல் சாகுபடி மூலம் கிடைக்கும் வைக்கோல் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையானது உண்டு. ஆனால் தற்போது கால்நடை கள் குறைந்து விட்டதால், வைக்கோலின் தேவை குறைந்து விட்டது. வைக்கோலை வாங்க யாரும் வருவதில்லை.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை பணி முடிந்து, மீண்டும் அடுத்த சாகுபடிக்கான உழவுப் பணி தொடங்கும்போது வயல் களிலேயே வைக்கோலை போட்டு மடக்கி உழுது உரமாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்டத் தின் முன்னோடி விவசாயியான வருக்கத்தட்டை சேர்ந்த தங்கப்பன் கூறும்போது, “5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 40 கிலோ கொண்ட வைக்கோல் கட்டு 400 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. ஆனால், இப்போது ரூ.150-க்கு கூட வாங்க ஆள் கிடையாது. அரசு கால்நடை மருத்துவமனைகள் மூலம் மானிய விலையில் வைக்கோல் வழங்கும் திட்டமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு
முன்பு வைக்கோலுக்கு நல்ல விலை கிடைத்ததால், நெல் சாகுபடி செலவுகளை வைக்கோல் விற்பனை மூலம் சரிகட்டி வந்தோம். ஆனால், அந்த வருவாயை தற்போது இழந்துள்ளோம்.
ஏற்கெனவே நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு குவிண்டால் ரூ.1,460-க்கு விற்பனை செய்து வருகிறோம். இந்நிலையில் வைக்கோலும் விற்பனையாக வில்லை.
பசு மற்றும் காளை மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததே இதற்கு காரணம். கால்நடை வளர்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT