Published : 16 Apr 2017 12:23 PM
Last Updated : 16 Apr 2017 12:23 PM
தொடர் போராட்டத்தால் நாட்டின் கவனத்தை ஈர்த்த கேரள மாநிலம் பிளாச்சிமடை தனியார் குளிர்பான தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக வரும் 22-ம் தேதி முதல் தொடர் சத்தியாக்கிரக சமரம் (போராட்டம்) நடைபெற உள்ளது.
பாலக்காடு மாவட்டம் சிற்றூர் அருகே ஆதிவாசிகளும், பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகம் வாழும் கிராமம் பிளாச்சிமடை. இங்கு 17 ஆண்டுகளுக்கு முன் தனியார் குளிர்பான நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. குளிர்பானம் தயாரிப்பதற்காக தண்ணீர் எடுக்க 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளும் தோண்டப்பட்டன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுடன், கிணறுகளில் தண்ணீர் கழிவுநீராக மாறியது. விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து பழங்குடி இன மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தால், தொழிற்சாலையை மூட வேண்டிய சூழல் உருவானது. தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றம் வரை சென்றபோதிலும், வெற்றியடைய முடியவில்லை. இது தொடர்பாக உண்மை அறியும் குழுவை அமைத்தது கேரள அரசு.
குளிர்பான நிறுவனத்தின் நீர் சுரண்டல், அதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு குறித்து விளக்கிய அந்தக் குழு, மக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் தீமைகளை விளக்கியதுடன், ரூ.216 கோடி பொருளாதார இழப்பும் ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
இது தொடர்பாக கேரள அமைச்சரவை விவாதம் நடத்தி, இந்த தொகையை தனியார் நிறுவனத்திடம்பெற்று, உரியவர்களுக்கு வழங்க தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது. எனினும், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வரும் 22-ம் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பிளாச்சிமடை மக்கள் போராட்டக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து போராட்ட ஆதரவுக் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகன் பத்திச்சிறா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
1999-ம் ஆண்டில் பிளாச்சிமடை, புதுச்சேரி பஞ்சாயத்தில் உள்ள தொழிற்பேட்டையில் இரு குளிர்பான நிறுவனங்கள் அமைக்க கேரள அரசு அனுமதித்தது. பிளாச்சிமடையில் தொடங்கப்பட்ட தனியார் குளிர்பான தொழிற்சாலையால் நீர்நிலைகள் பாழாகின. இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு முன் மக்கள் போராட்டத்தை தொடங்கினர். இது தொடர்பாக தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டபோது, தொழிற்சாலையில் மறுசுழற்சி முறை தொழில்நுட்பம் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், குடிநீர், சுற்றுச் சூழல், மக்கள் உடல்நிலை, உயிரினங்கள் வாழ்நிலை பாதிப்புகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்த உண்மை அறியும் குழு, ரூ.216 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக 2006-ம் ஆண்டில் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
ஆனால், நஷ்டஈடு பெறுவதற்காக மாநில அரசே தீர்ப்பாயம் அமைக்காமல், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. எனினும், இது தொடர்பான சட்ட மசோதா காங்கிரஸ், பாஜக ஆட்சிகளின்போது நிறைவேறவில்லை. மத்திய அமைச்சர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் சட்டநிபுணர்களுக்கும் இருந்த நெருக்கம், இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் செய்துவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
ஆனால், நஷ்டஈடு பெறுவதற்காக மாநில அரசே தீர்ப்பாயம் அமைக்காமல், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. எனினும், இது தொடர்பான சட்ட மசோதா காங்கிரஸ், பாஜக ஆட்சிகளின்போது நிறைவேறவில்லை. மத்திய அமைச்சர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் சட்டநிபுணர்களுக்கும் இருந்த நெருக்கம், இந்த மசோதாவை நிறைவேற்றவிடாமல் செய்துவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
கேரளத்தில் உம்மன்சாண்டி ஆட்சி செய்தபோது, சட்டப்பேரவையிலேயே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மாநில அரசின் சட்டத் துறை ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. எனினும், உரிய தீர்வுகாணப்படவில்லை. எனவே, கேரள சட்டப்பேரவையிலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, இழப்பீட்டுத் தீர்ப்பாயம் அமைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு தொகையைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 22-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினோம். அதேபோல, வரும் 22-ம் தேதி முதல் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம். இதில் பிளாச்சிமடை போராட்டக் குழுவினர் மட்டுமின்றி, பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், விவசாயம், சூழல் அமைப்புகளும் பங்கேற்கின்றன. இந்தப் போராட்டத்துக்குப் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், பின்னர் 4 வகையான போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT