Published : 04 Jun 2016 12:31 PM
Last Updated : 04 Jun 2016 12:31 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலாவது அதிகப்படி யான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. விளவங்கோடு தொகுதியில் அதிமுகவின் டெபாசிட் தொகையே பறிபோனது. நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவால் இரண்டாம் இடத்துக்கு கூட வர முடியவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே போட்டிக் களத்தில் அதிமுக இருந்தது.
அடுத்த இலக்கு
இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கோடு அதிமுக இப்போதே பணிகளைத் தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி எதுவும் கிடையாது. நாகர்கோவில். குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை என நான்கு நகராட்சிகள் உள்ளன. இதில் பத்மநாபபுரம் நகராட்சி மட்டுமே அதிமுக வசம் உள்ளது. குளச்சலில் திமுக, நாகர்கோவிலில் பாஜக, குழித்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளன. தமிழகத்திலேயே கூடுதலாக பேரூராட்சிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் உள்ளன. இங்கு 56 பேரூராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள், 99 ஊராட்சிகள் உள்ளன. இம்முறை இவற்றில் பெருவாரியாக வெற்றிபெற அதிமுகவினர் வியூகம் வகுத்துள்ளனர்.
புதிய வியூகம்
அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவோரிடம் அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டு சாதனைகள், இந்த ஆட்சியில் மேற்கொள்ளப் போகும் பணிகள் குறித்து பேசி, தகவல்களை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஊராட்சி அளவில் அதிமுகவின் வாக்குகளை மதிப்பீடு செய்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பூத் வாரியாக வாங்கிய வாக்கு விபரங்களின் அடிப்படையிலும் அதிமுகவுக்கு சாதக, பாதகமான அம்சங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளில் பாஜக பிரித்த வாக்குகளே திமுகவின் வெற்றியை மிக எளிதாக்கியது. உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த நிலை தொடர்ந்து விடாமல் இருக்க, பாஜக எதிர்ப்பு அரசியலையும் அதிமுக தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இருந்தும் குமரி அதிமுகவினரின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பலிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT