Last Updated : 09 Sep, 2015 02:51 PM

 

Published : 09 Sep 2015 02:51 PM
Last Updated : 09 Sep 2015 02:51 PM

தமிழக மின்துறையில் புரட்சி: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா உரையின் 10 முக்கிய அம்சங்கள்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் தொழில் முதலீட்டுக்கு எற்ற இடமாகத் திகழ்வதாக கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மைய அரங்கில் முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார்.

மாநாட்டுச் சின்னத்தை அறிமுகப்படுத்திய முதல்வர் ஜெயலலிதா முறையே மாநாட்டு கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர் தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபகரமானதாக இருக்கும் என்றார்.

முதல்வர் உரையின் 10 முக்கிய அம்சங்கள்:

1. தமிழகம் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் நீங்கள் செய்யும் முதலீடு இங்குள்ள கடின உழைப்பாளிகளை நம்பிச் செய்யும் முதலீடு. எனவே தமிழகத்தில் செய்யும் முதலீடு லாபகரமானதாக அமையும். தமிழர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

2. தமிழகம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது வளர்ச்சிமிகு, முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டிலேயே அதிக அளவு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்ததாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருமானமானது தேசிய சராசரியைவிட 1.5 மடங்கு அதிகமாகவுள்ளது.

3. நான் எப்போதுமே, முந்தைய வெற்றிகளிலேயே தேங்கிக் கிடப்பதை விரும்புவதில்லை. அடையவேண்டிய இலக்குகள் நிறைய இருக்கின்றன. தமிழக மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே புதிய இலக்கு.

4. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மின் துறை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற போது மின்பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறும் தருணத்தில் இருக்கிறது. தமிழக அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்கள், நீண்ட காலத்துக்கான மின் விநியோகத் திட்டங்கள் மூலம் தமிழகம் மின் மிகையை எட்டும் தருவாயில் உள்ளது.

5. கடந்த 2012-ல் சூரிய மின் உற்பத்திக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாட்டிலேயே அதிக சூரிய மின்னுற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

6. தமிழகம் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. அதே நேரத்தில் மக்கள் நலனையும் சரிசமமாக பேணுவதாக இருக்கிறது. வர்த்தகத்திற்கு ஆதரவான சூழலுடன் சமூகப் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழகம் பெற்று வருகிறது. இது தற்செயலாக நடந்தது அல்ல. இது பெருமைக்குரிய விஷயம் .

7. 2013- 14 இடைப்பட்ட காலத்தில், சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

8. முதலீட்டாளர்களுக்கான சூழலை ஏற்படுத்தித் தருவதில் தமிழகம் கடின உழைப்பைச் செலுத்தியுள்ளது. மாநில அரசின் கொள்கைகளை அத்துமீறாமல் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு திட்டங்களை வகுத்துள்ளது.

9. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர்க்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

10. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க தேவையான உதவியை மத்திய அரசு சார்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்துதர உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டில் இன்று வெளியான தொழில் முதலீட்டு அறிவிப்புகள்:

* தென் தமிழகத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தொழில் முதலீடு செய்யப்படும்- ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார்.

* தமிழகத்தில் மூன்றாவதாக ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும்- யமஹா நிறுவனம்.

* ஒசூரில் தொழிற்சாலை தொடங்கப்படும் - டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்

* டைசல் பயோ பார்க் இரண்டாவது கிளையை நிறுவும்

* ரூ.2000 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்படும். 2022-ல் இந்த முதலீடு இருமடங்காகும்- மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x