Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

முஸ்லிம் லீக் வேட்பாளர் கார் மீது தாக்குதல்: திமுக சாலை மறியலால் பரபரப்பு

துரைமுருகன் மகனுக்கு வேலூர் தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த திமுகவினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தினர். குடியாத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுகவில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் அப்துல் ரஹ்மான் எம்.பி. மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கதிர் ஆனந்த், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது துரைமுருகன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் துரைமுருகனின் ஆதரவாளர்கள் பலர் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்தனர். துரைமுருகனின் சொந்த ஊரான கே.வி.குப்பம் பகுதி திமுகவினர் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு தேர்தல்பணி செய்வதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், குடியாத்தத்தில் சனிக்கிழமை, வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட செயலாளர் காந்தி, தேர்தல் பொறுப்பாளர் கு.பிச்சாண்டி மற்றும் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் கே.வி.குப்பம் வழியாக காரில் சென்றுள்ளனர்.

கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அப்துல் ரஹ்மான் சென்ற காரை நிறுத்திய திமுக நிர்வாகிகள், “எங்கள் அண்ணனின் மகன் தேர்தலில் நிற்காமல் போனதற்கு நீங்கள்தான் காரணம்” என கூறியபடி கார் கண்ணாடியை கற்களால் தாக்கினர். இதில், அப்துல் ரஹ்மானின் கார் கண்ணாடி சேதமடைந்தது. அங்கிருந்த நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி சமாதானம் செய்தார்.

சேதமடைந்த காரை அங்கேயே விட்டுவிட்டு வேறொரு காரில் அப்துல் ரஹ்மான் குடியாத்தம் புறப்பட்டுச் சென்றார். குடியாத்தம் பகுதியில் நடந்த திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும் அப்துல் ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திமுக பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, குடியாத்தம் ஒன்றிய பொருளாளர் ஜி.ஆர்.அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சித்தூர் கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x