Published : 27 Sep 2013 09:51 AM
Last Updated : 27 Sep 2013 09:51 AM
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் பார்வையற்ற பட்டதாரி மாணவர்களை கண்ணியமாக நடத்த காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஆர்.முகமது நசுருல்லா என்ற பார்வையற்ற வழக்கறிஞர் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.இநத கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:தங்கள் கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அமைதியான முறையில் பட்டதாரி வாலிபர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை வாகனங்களில் ஏற்றும் காவல் துறையினர், அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சென்னை மாநகரத்துக்கு வெளியே 70 கி.மீ., 80 கி.மீ. தொலைவுக்கு அப்பால் விட்டுவிட்டு வருகின்றனர். ஒருநாள் ஒரு சுடுகாட்டில் கொண்டு போய் அவர்களை விட்டுவிட்டு வந்துள்ளனர். பெண்கள் உள்பட பார்வையற்ற மாணவர்கள் பலரை காவல் துறையினர் தாக்குகின்றனர்.
இது தொடர்பான செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வருகின்றன. ஆகவே, இந்தப் பிரச்னையில் நீதிமன்றம் தலையிட வேண்டும். பார்வையற்றவர்களைக் கண்ணியமாக நடத்திடவும், அமைதியான முறையில் அவர்கள் போராட்டம் நடத்திடும் வகையிலும் உரிய உத்தரவை அரசுக்குப் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு இந்தக் கடிதத்தையே பொது நல மனுவாக ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அமைதியான முறையில் அவர்கள் போராட்டம் நடத்திடும் வகையிலும் உரிய உத்தரவை அரசுக்குப் பிறப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT