Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM

வாகன விபத்து போன்ற ஏற்பாட்டுடன் பொறியாளரை கொன்ற கூலிப்படை- பிடிபட்டவரிடம் விசாரணை

புதுவை கந்தப்ப முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ஜீனத் என்ற லதா (45). இவர் நகராட்சியில் இளநிலை பொறியாளராக இருந்தார். புதன்கிழமை காலை நெல்லித்தோப்பில் உள்ள அலுவலகத்துக்கு டூவீலரில் சென்றபோது, மறைமலையடிகள் சாலையில் எம்.ஜி.ஆர் சிலை அருகே பின்னால் வந்த கார் மோதி இறந்தார். போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இறந்த பொறியாளரின் தாய் தாரா, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒரு புகார் அளித்தார். அதையடுத்து இவ்வழக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையில் தாரா வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: எனது மகள் ஜீனத் எம்.டெக். படித்தவர். ஜீனத்துக்கும் மரக்காணத்தைச் சேர்ந்த டாக்டர் செல்வராஜுக்கும் கடந்த 96-ல் திருமணமானது. இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 2007-ல் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னரும் இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. எனது மகள் இறப்பு விபத்தாக இருக்க வாய்ப்பில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து உருளையன் பேட்டை போலீஸார் விபத் துக்குக் காரணமான கார் ஓட்டுநர் விஜயேந்திரனை விசாரித்தனர். வெள்ளிக்கிழமை அவர் அளித்த வாக்குமூலத்தில் கூலிப்படை மூலம் விபத்தைப் போன்ற தோற்றத்தில் இக்கொலை நடத்தப் பட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது:

கூலிப்படையினர் தொடர்ந்து பல நாட்கள் ஜீனத்தைக் காரில் பின்தொடர்ந்துள்ளனர். புதன் கிழமையன்று டூவீலரில் ஜீனத் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்த காரில் விஜயேந்திரன், முருகன், சுரேந்திரன் ஆகியோர் இருந்துள்ளனர். அத்துடன் ஜீனத்தை இரு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் பின்தொடர்ந்துள்ளனர். கூலிப்படையினர் இணைந்து டூவீலரில் கார் மோதி விபத்து ஏற்படுத்தியதுபோல் கொலை செய்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய காரின் உரிமையாளர் மேட்டுப்பாளை யத்தைச் சேர்ந்த வீரபத்திரனை, இக்கொலையில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப் போலீஸார் சென்றபோது, அவர் தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஜீனத்தின் கணவர் டாக்டர் செல்வராஜும் தலைமறைவாக உள்ளார். திருமணத்துக்கு பிறகு ஜீனத்-செல்வராஜ் இணைந்து வாங்கிய பல லட்சம் மதிப்பிலான சொத்தினை விற்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளதாகவும், அது இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமா என்கிற கோணத் திலும் விசாரித்து வருகிறோம். இக்கொலையில் ரியல் எஸ்டேட்காரர் ஒருவர் தலையீடும் இருப்பதால் அவர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கொலைக்கு கூலிப்படையை ஏவியவரைக் கண்டறிந்துவிடுவோம்’ எனக் காவல்துறையினர் தெரிவிக் கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x