Published : 20 Jun 2015 12:36 PM
Last Updated : 20 Jun 2015 12:36 PM

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் மது அருந்தும் கூடமாக மாறிய அரசுப் பள்ளி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சமூக விரோதிகள் சிலர் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தடுக்கவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இரவு நேரத்தில் சிலர் உள்ளே புகுந்து பள்ளிக்குச் சொந்தமான பொருட்களைச் சேதப்படுத்துகின்றனர். மேலும், அங்கு மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்கின்றனர்.

காலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் முதலில் மது பாட்டில்களை அகற்றும் பணியில்தான் ஈடுபடுகின்றனர். அப்பகுதி மக்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பள்ளிக்குள் மது அருந்துபவர்கள் தங்களது பழக்கத்தைக் கைவிடவில்லை.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கேயே மது அருந்திவிட்டு, பாட்டில்களை கண்காட்சி போல வரிசையாக அடுக்கிவைத்துச் சென்றுள்ளனர். இது, மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு சபலத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கல்விக் கூடத்தை மது அருந்தும் கூடமாக மாற்றும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இரவு ரோந்தின்போது பள்ளியைக் கண்காணிக்க காவல் துறையினர் முன்வர வேண்டும்.

கணினி, ஆய்வகப் பொருட்கள் என்று பள்ளியில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ள நிலையில், அவற்றைப் பாதுகாக்க இரவுக் காவலர்கள் அவசியம். ஆனால், இங்கு இரவுக் காவலர் பணியிடம் காலியாக உள்ளதால், சமூக விரோதிகள் பள்ளியில் நுழைந்து விடுகின்றனர். எனவே, உடனடியாக இரவுக் காவலரை நியமிக்க வேண்டும்.

மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். தேவையற்ற நபர்கள் உள்ளே வருவதைத் தடுக்கும் வகையில், பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x