Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM
பணத்துக்காக வேறு சாதிப்பெண்களை தலித் இளைஞர்கள் காதல் வலையில் வீழ்த்தி மோசம் செய்வதாக புகார்கள் வரும் நிலையில், மற்ற சாதியினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கைக்குழந்தையுடன் நிராதரவாய் நிற்கும் தலித் பெண்களின் பட்டியல் ஒன்றை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது மதுரை ‘எவிடென்ஸ்’ அமைப்பு.
தகவலறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த மற்றும் காதல் வலையில் வீழ்ந்த பெண்களில் 123 பேர் கணவராலும் காதலராலும் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ‘எவிடென்ஸ்’. இவர்களில் 102 பேர் தலித்கள்.
இந்த 123 வழக்குகளில் தலித் பெண்களை காதலித்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவங்கள் மட்டுமே 79 என்று தெரியவருகிறது.உதாரணத்துக்கு அவற்றில் சில சம்பவங்கள்.. (பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன)
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (20). இவர் வேலைபார்த்த கயிறு கம்பெனி முதலாளி சிவா, காதல் வசனம் பேசி சரஸ்வதியை மிரட்டி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருக்கிறார். கர்ப்பமுற்ற சரஸ்வதியை திருமணம் செய்ய மறுத்த சிவா, அவரை அடித்துத் துரத்தினார்.
இதையடுத்து மேலூர் மகளிர் போலீஸால் கைது செய்யப்பட்ட சிவா, பி்ன்னர் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார். இப்போது, இரண்டு மாத ஆண் குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் நிற்கிறார் சரஸ்வதி.
ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சிறுமி சுஜாதாவை (13) மைக்கேல்ராஜ் என்பவர் பலமுறை கடத்திச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார். தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாத நிலையில் அந்தச் சிறுமி வயிற்று வலியால் துடித்திருக்கிறாள்.
டாக்டர்கள் பரிசோதித்தபோது அந்த சிறுமியின் வயிற்றில் மூன்று மாத கரு வளர்ந்திருப்பது தெரியவந்தது.
தூத்துக்குடி மகளிர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட மைக்கேல்ராஜ், ஜாமீனில் வந்துவிட்டார். சுஜாதாவின் கையில் மூன்று மாத ஆண் குழந்தை.
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அகல்யாவை (22) அன்புராஜ் என்பவர் காதலிப்பதாகச் சொல்லி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் கருவுற்ற அகல்யாவுக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சித்தார் அன்புராஜ்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தும் அன்புராஜ் கைது செய்யப்படவில்லை. அகல்யாவுக்கு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.தருமபுரி மாவட்டம் பாப்பான்பாடியைச் சேர்ந்த தமிழ்மணி, பூபதி என்பவரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதில் கருவுற்றார். இதுதொடர்பாக ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் எஃப்.ஐ.ஆர் போட்டும் இதுவரை குற்றவாளி கைதாகவில்லை.
தமிழ்மணியும் ஒரு ஆண் பிள்ளைக்கு தாயாகிவிட்டார். கடலூர் மாவட்டம் சின்னவடவாடியைச் சேர்ந்த காவ்யாவை (13), பாவாடைராயன் என்பவர் காதலிப்பதாகக் கூறி கரும்புத் தோட்டத்தில் சித்ரவதை செய்து பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
காவ்யா கர்ப்பமான நிலையில், பாவாடைராயன் கைது செய்யப்பட்டார். ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயாகிவிட்ட காவ்யா, இப்போது கூலி வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்.
இவை எல்லாம் ஒரு சில உதாரணங்கள்தான் என்று சொல்லும் எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிர், ‘‘இதுபோன்ற கொடிய குற்றங்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்கும் நிலையில் நமது காவல்துறை இல்லை.
ஆசைவார்த்தை கூறி பெண்களை மோசம் செய்வோரை தண்டிக்கும் வகையில் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஆண்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT