Published : 27 Sep 2016 02:45 PM
Last Updated : 27 Sep 2016 02:45 PM
மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 100 வார்டு அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 75 சதவீதம் அமைச்சர் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் சீட் கிடைக்காத நிர்வாகிகள் கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளி யிடப்பட்டது. இந்த பட்டியலில் எம்.எஸ்.பாண்டியன் (5-வது வார்டு), கிரம்மர் சுரேஷ் (15-வது வார்டு), சோலை எம்.ராஜா (21-வது வார்டு), கே.ராஜபாண்டியன் (20-வது வார்டு), கு.திரவியம் (23-வது வார்டு), ஜெயவேல் (47-வது வார்டு), கே.சண்முகவள்ளி (70-வது வார்டு), கண்ணகி பாஸ்கரன் (80-வது வார்டு), சுகந்தி அசோக் (42-வது வார்டு), சண்முகப்பிரியா (24-வது வார்டு) ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இதில் சண்முகவள்ளி, சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன், சண்முகப்பிரியா ஆகியோர் பெண் மேயர் வேட்பாளராகக்கூடிய முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் அதிமுகவில் எதுவும் நடக்கலாம் என்பதால் மற்ற பெண் வேட்பாளர்களும், அமைச்சரை சந்தித்து ஆசி பெற்று வெற்றி பெற்றால் மேயராகும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அக்கட்சியினர் சிலர் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி வார்டு வேட்பாளர் பட்டியல் ஒரு மாதத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டது. மேயர் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு சில வார்டுகளில் மட்டுமே வேட்பாளர் மாற்றம் நடந்துள்ளது. வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டே பெரும்பாலும் வசதி படைத்தவர்களை செல்லூர் ராஜூ வேட்பாளராக்கி உள்ளார்.
மேலும் மேற்கு தொகுதியில் தனது வெற்றிக்குப் பாடுபட்ட சிலருக்கும் சீட் வழங்கியதாகவும், சமுதாய ரீதியதாக சிலருக்கு முக்கியத் துவம் அளித்துள்ளதாகவும், இதனால் விருப்ப மனு பெற்றது கண்துடைப்புதான் என்கின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில் 75 சதவீதம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்களே எனக் கூறப்படுகிறது. முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மிகக் குறைவுதான் எனக் கூறப்படுகிறது.
தேமுதிகவில் இருந்து வந்த அரவிந்தன் உட்பட புதியவர்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிக ளில் இருந்து சமீப காலங்களில் வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்த தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகக் தலைவர் சோலை எம்.ராஜா, கிரம்மர் சுரேஷ் போன்றவர் களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சோலை எம்.ராஜா சமீப காலமாகவே செல்லார் ராஜூ உடன் வந்து செல்பவராக, அவரது தீவிர ஆதரவாளராக இருக்கிறார். ஆரம்பத்தில் மேயர் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன் அவரைத்தான் மேயர் வேட்பாளராக்க முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் கவுன்சிலராக வெற்றி பெற்றால் துணை மேயர் வேட்பாளராகும் வாய்ப்பு சோலை எம்.ராஜா, கிரம்மர் சுரேஷ், கு.திரவியம், சாலை முத்து, எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்ப டுகின்றனர். வெற்றி வாய்ப்பு பறிபோவதை தடுக்க சாலைமுத்து உட்பட அமைச்சருக்குப் பிடிக்காத சிலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் வரை அமைச்சரின் ஆதரவு பெற்றவர்களே சீட் பெற்றுள்ளனர்.
இந் நிலையில், அதிமுகவில் 4 முறை வெற்றி பெற்ற, 2 முறை வெற்றி பெற்ற, கடந்த முறை வெற்றி பெற்ற சீனியர் கவுன்சிலர்கள் உட்பட 43 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர்கள் கட்சித் தலைமைக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீது புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சிலர், சென்னைக்கு சென்று பட்டியலை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சரின் சதியால் சீட் மறுப்பு: அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சிக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 93-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா சீனிவாசனின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது:
இதே வார்டில் 1996, 2001, 2006, 2011 என 4 முறை தொடர்ந்து கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளேன். 2006-ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, என்னை மிரட்டினர். வழக்குப் பதிவு செய்தனர். மு.க.அழகிரி, அவரிடம் உதவியாளராக இருந்த பொட்டு சுரேஷ் ஆகியோர் கட்சிக்கு வருமாறும், பணம் கொடுப்பதாகவும் பலமுறை அழைத்தனர். எனது திருமணமே ஜெயலலிதா தலைமையில்தான் நடந்தது. அந்த அளவுக்கு அதிமுக விசுவாசியான நான் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் செல்லூர் ராஜூவின் வெற்றிக்குப் பாடுபட்டேன்.
அப்படியிருந்தும் எனக்கு சீட் வழங்கவில்லை. இந்த வார்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக பிராமணர் சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் பிரதிநிதியாக உள்ள எனக்கு வாய்ப்பளிக்காமல் போனதற்கு செல்லூர் ராஜூதான் காரணம். இது குறித்து முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளேன். ஜாதி, பணம், உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சீட் வழங்கியுள்ளார்.
எனக்கு சீட் வழங்காதது பெரிதல்ல. இந்த வார்டில் அதிமுக வெற்றி பெற வேண்டும். அமைச்சரின் செயலால் எதிர்க்கட்சிகள் வாய்ப்பு பெறப்போகிறது. மேயர் வேட்பாளராக என்னை குறிப்பிட்டு செய்திகள் வெளியானது. தற்போது கவுன்சிலராகவே இல்லாமல் செய்துள்ளனர்.
இதுவரை மதுரை நகர் அதிமுக செயலாளர்களாக இருந்த அனைவரும் எனக்கு சீட் வழங்கினர். செல்லூர் ராஜூ மறுத்துவிட்டார். இதற்கு அமைச்சர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT