Last Updated : 03 Feb, 2014 12:00 AM

 

Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM

தாம்பரம் சண்முகம் சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி- உலக தரத்தில் சாலையை மாற்ற திட்டம்

தாம்பரம் சண்முகம் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை ரூ.3.50 கோடி செலவில் விரிவுபடுத்தி பல்வேறு வசதிகளை ஏற்படுத்த தாம்பரம் பெரு நகராட்சி திட்டமிட்டுள்ளது.

தாம்பரம் (மேற்கு) முக்கிய பகுதியாக சண்முகம் சாலை உள்ளது. இந்த சாலையில் துணிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன. எனவே தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தாம்பரம் பகுதி மக்கள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான பொருள்களை வாங்க சண்முகம் சாலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் இச்சாலை சிறிய தி.நகராகவே திகழ்கிறது.

வழியை மறைத்த மேம்பாலம்

தாம்பரத்தில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் ஒரு பாதை சண்முகம் சாலைக்கு செல்லும் வழியை முற்றிலுமாக மறைத்துவிட்டது. இதனால், சண்முகம் சாலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் சுமார் 1 கிமீ சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

சாலை ஆக்கிரமிப்பு

இதனை நன்றாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் சண்முகம் சாலையை இரு புறங்களிலும் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். சண்முகம் சாலைக்கு செல்ல வேண்டிய மற்றொரு வழியான பெரியார் நகர் வளைவில் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், சண்முகம் சாலையில் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தே செல்கின்றன.

நீதிமன்றத்தில் வழக்கு

இது தொடர்பாக தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணியன் கூறியதாவது:

சண்முகம் சாலை 80 அடி கொண்டது. இரு புறங்களிலும் தலா 10 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் சண்முகம் சாலை 60 அடியாக குறைந்துவிட்டது.

இந்த கடைகளை அகற்ற வேண்டும். ஆனால், கடைகளை அகற்றக்கூடாது என இங்குள்ள பெருகடை வியாபாரிகள், சிறுகடை வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கமிட்டி அமைப்பு

இந்த பிரச்சினையை தீர்ப்பதாக ஒரு குழுவை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, குழு அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஸ்பெயின் நாட்டு சாலை

சண்முகம் சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். வாகனம் செல்வதற்கு, கடைகள் அமைப்பதற்கு மற்றும் நடைபாதை என 3 பிரிவுகளாக சாலை பிரிக்கப்படும். இந்த பணிகள் ரூ.3.50 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்வர் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலுள்ள உலகளவில் பிரபலமான சாலையைப் போன்று இந்த சாலையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தண்ணீர், மின்சார இணைப்பு:

இவை தவிர சண்முகம் சாலையில் தண்ணீர் இணைப்பு மற்றும் மின்சார கேபிள்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். மழைநீர் வடிகால் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x