Published : 01 Jul 2016 08:35 AM
Last Updated : 01 Jul 2016 08:35 AM
தடய அறிவியல் துறையில் ஆராய்ச்சிகள் நடைபெறாமல் உள்ளதுதான் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அத் துறையின் முன்னாள் இயக்குநர் பி.சந்திரசேகரன் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பி.சந்திர சேகரன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:
சுவாதியை கொல்வதற்கு பயன் படுத்தப்பட்ட அரிவாளை வைத்து குற்றவாளியை நெருங்குவது எந்தளவுக்கு சாத்தியம்?
குற்றவாளி பயன்படுத்திய அரிவாளில் உள்ள கைரேகையை தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அரிவாளின் கைப்பிடி மரத்தால் செய்யப் பட்டுள்ளது. எனவே, கைரேகை சரியாக பதியாமல் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. கைரேகை சரியாக பதிந்திருந்தால் இந்த கொலை வழக்கில் சந்தேகத் துக்கு இடமானவர்களின் கைரேகை களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் அரிவாளைப் பற்றிய விவரங்களைத் திரட்ட வேண்டும். அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை கண்டறிந்து அங்கே விசாரணை நடத்த வேண்டும்.
கைரேகையை மட்டும் வைத்துக் கொண்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியுமா?
கைரேகை மட்டுமல்ல, கால் ரேகை, கால் தடத்தைக் கொண்டு கூட கொலையாளியை கண்டுபிடிக் கலாம். விழுப்புரத்தில் நடந்த ஒரு கொலையில் ரத்தத்தில் இருந்த கொலையாளியின் கால் தடத்தைக் கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்த கால் தடத்தில் ரேகைகூட கிடையாது. ஆனால், அவரது காலின் அமைப்பு பாதத்தின் முன், பின் வடிவங்கள், விரலின் அமைப்பு போன்றவற்றின் மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டான். எனவே, சுவாதி கொலை வழக் கிலும், குற்றவாளியின் கால் தடம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கைரேகை மூலம் எந்த ஒரு தனி நபரையும் கண்டறியும் வசதி வெளிநாடுகளில் உள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லாததை இதுபோன்ற சம்பவங்களில் பின்னடைவாக கருதுகிறீர்களா?
உலகின் பல்வேறு நாடுகளில் குடிமக்களின் கைரேகைகளை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. பாஸ்போர்ட், ஆதார் சேவைகளுக்காக பொதுமக்கள் விரும்பி செல்லும்போது மட்டும் தான் கைரேகைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, இந்திய குடிமக்கள் அனைவரின் கைரேகையையும் பதிவு செய்ய சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களும் தயங்காமல் கொடுக்க வேண்டும்.
வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டு தடயவியல் துறை எப்படி உள்ளது?
தொழில்நுட்பங்கள் போன் றவை வெளிநாட்டுத் தரத்துக்கு இணையாக உள்ளன. ஆனால் ஆராய்ச்சி மேம்பாடு என்னும் அம்சம் நமது தடய அறிவியல் துறையில் இல்லை. இதுதான் பல்வேறு கொலை வழக்குகளிலும் துப்பு துலக்குவதில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. நான் தடய அறிவியல் துறை இயக்குநராக இருந்தபோது, ஆராய்ச்சிக்காக தனிப்பிரிவை ஏற்படுத்தி, அதற்கு பொறுப்பாக துணை இயக்குநரை நியமித்திருந்தேன். ஆனால், நான் ஓய்வுபெற்ற பிறகு அந்த மையம் மூடப்பட்டுவிட்டது.
இங்கிலாந்தில் தடய அறிவியல் துறைக்கென்று மிகப்பெரிய ஆய்வு மேம்பாட்டு மையம் உள்ளது. அங்கே, கொலையாளியின் சட்டை நூல் கிடைத்தால்கூட நூலிழைகளை வைத்து அது எந்த நிறுவன தயாரிப்பு, எத்தனை விற்பனை மையங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதைக்கூட ஆய்வு செய்ய முடியும். சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை சம்பந்தப்பட்ட அந்தப் பெண் தள்ளிவிட முயற்சித்தபோது, நிச்சயம் துணி நூல், கிடைக்க வாய்ப்பிருக்கும். ஆனால், அவற்றை ஆய்வு செய்யும் வசதி நம்மிடம் இல்லை. நம்முடைய தடய அறிவியல் துறையில் ஆராய்ச்சிகள் இல்லாததால் இதுபோன்ற கொலைகளில் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT