Last Updated : 31 Oct, 2016 08:35 AM

 

Published : 31 Oct 2016 08:35 AM
Last Updated : 31 Oct 2016 08:35 AM

தீபாவளிக்கு மது விற்பனை இலக்கு நிர்ணயிக்கவில்லை: மது குடிப்பதை ஊக்குவிப்பதுபோல் அமைந்துவிடும்- டாஸ்மாக் நிர்வாகம் புது முடிவு

தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனைக்காக இலக்கு நிர்ணயம் செய்தால் அது மது குடிப்பதை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும் என்பதால் இந்த தீபாவளிக்கு மது விற்பனைக்காக டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை.

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி வீதம் ஆண்டுக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடி அளவில் வருவாய் கிடைக்கிறது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை இலக்கு நிர்ணயிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பண்டிகை நேரங்களில் டாஸ் மாக் வருவாய் அதிகம் இருக்கும். இதனால், விற்பனையை அதிகப் படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் வாய்மொழியாக இலக்கு நிர்ணயம் செய்யும். இதன்படி, கடந்த 2014 தீபாவளியின் போது ரூ.350 கோடிக்கு டாஸ்மாக் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டன. கடந்தாண்டு தீபாவளியின் போது ரூ.400 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மழை வெள்ளம் காரணத்தால், ரூ.350 கோடி அளவிலேயே மது விற்பனை இருந்தது.

இந்த சூழலில், இந்தாண்டு தீபாவளிக்கு இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை. வார இறுதி நாளில் தீபாவளி வருவதால் வழக்கமாகவே விற்பனை அதிகமாக இருக்கும். எனவே, வாய்மொழியாகக் கூட உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.

மேலும், கலால் வரி பாக்கி வைத்த 3 நிறுவனங்களிடமிருந்து மது கொள்முதல் செய்வதையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில், விற்பனை குறைவாக உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆர்.கிர் லோஷ்குமார் ‘தி இந்து’ விடம் கூறுகையில், “தீபாவளி பண்டி கையையொட்டி கோடிகளில் மது விற்க வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயிக்கவில்லை. இது மது குடிப்பதை ஊக்குவிப்பது போல் அமைந்துவிடும். தமிழகத் தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 10-க்கு 10-க்கு அடிகள் என்கிற அளவில்தான் உள்ளன. இந்த நிலையில், இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்தால் அது கடைகளில் பிரச்சினையை ஏற் படுத்தும். எனவே, தீபாவளிக்காக நாங்கள் இலக்கு ஏதும் நிர்ணயம் செய்யவில்லை” என்றார்.

ரூ.370 கோடியை தாண்டியது!

வழக்கமாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை களை கட்டும். இந்தாண்டு விடுமுறை நாளான சனிக்கிழமையில் தீபாவளி வந்ததால், டாஸ்மாக் மதுபான விற்பனை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் (28-ம் தேதி) ரூ.108 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.135 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. 3-வது நாளான நேற்று மாலை வரை ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்றுள்ளன. இரவு இன்னும் அதிகரிக்கும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டு தீபாவளியின் டாஸ்மாக் விற்பனை ரூ.350 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x