Published : 15 Mar 2017 10:56 AM
Last Updated : 15 Mar 2017 10:56 AM

தரமின்றி சீரமைக்கப்பட்ட ராஜகோபால் பூங்கா: மரம் வளர இடையூறாக மேடை, மழைநீர் குளம்போல் தேங்கும் அவலம்

தருமபுரி ராஜகோபால் பூங்காவில் சீரமைப்பின்போது உரிய முறைகளை பின்பற்றாததால் பூங்கா சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தருமபுரி பேருந்து நிலையத்தில் வெகு அருகில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இதற்கான இடத்தை தருமபுரியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான ராஜகோபால் என்பவர் நகராட்சிக்கு தானமாக வழங்கியதால் இந்தப் பூங்கா அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மரங்களுடன் கூடிய இந்த பூங்கா நீண்ட காலமாக போதிய பராமரிப்பின்றி இருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூங்கா சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. நவீன கட்டமைப்புகள், குழந்தைகள் விளையாடியும், பார்த்தும் மகிழும் இடங்கள், பூங்காவிற்கு வருவோர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் ஆகியவை இங்கே உருவாக்கப்பட்டன. அதன்பின்னர் இந்தப் பூங்காவை நிர்வகிக்க தனியார் வசம் நகராட்சி நிர்வாகம் ஏலம் வழங்கியுள்ளது. தற்போது இந்தப் பூங்கா வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் தருமபுரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களில் சிலர் தங்கள் பணிகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டாலும், பணிகளுக்கு இடையே சற்றே இளைப்பாற பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் பூங்காவின் சீரமைப்பு கட்டுமானத்தின் போது உரிய முறைகளை பின்பற்றாததன் விளைவாக சிறு மழைக்கே மழைநீர் குளம்போல் பூங்காவின் நடைபாதைகளில் தேங்கி நிற்கிறது. மேலும், உள்ளே வருவோர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே, பூங்காவிற்கு வருவோர் வந்த வேகத்திலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, பூங்காவின் ஒரு பகுதியில் வளர்ந்துள்ள கொன்றை மரம் ஒன்றைச் சுற்றி வட்ட வடிவ மேடை அமைத்துள்ளனர். பூங்காவிற்கு வருவோர் அமர்ந்து இளைப்பாற உதவும் வகையில் இந்த மேடையின் மேல்பகுதியில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தைச் சுற்றி மேடை அமைக்கும்போது, அந்த மரத்தின் சுற்றளவு பெருக்கமடைய இடையூறு இல்லாத வகையில் மரத்தின் ஓரம் குறிப்பிட்ட சுற்றளவு மண் பரப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது வழக்கம். ஆனால், இந்த கொன்றை மரத்தைச் சுற்றி மேடை அமைத்தபோது இதுபோன்ற நடைமுறையை பின்பற்றவில்லை. இதனால், மரம் தற்போது நெருக்கடியான நிலைக்கு ஆளாகி பெருக்கமடைந்து வளர முடியாமல் தவிக்கிறது.

இந்த மேடை கட்டமைப்பில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் மரத்தை சுற்றி நெருக்கி வருகிறது. தொடர் அழுத்தம் நிலவுவதால் மரத்தைச் சுற்றி குறிப்பிட்ட அந்த பகுதியின் வலிமை குறைந்து வருகிறது. பலத்த காற்று வீசும்போது அந்த பகுதியோடு மரம் முறிந்து விழவும் வாய்ப்புள்ளது. இதுதவிர, மரத்தில் இருந்து மேடைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் மற்றும் வேர்களின் உருவ பெருக்கம் காரணமாக மேடையில் பல இடங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் பகுதிகளில் தேள், பூரான் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் பதுங்கிக் கொண்டால் பூங்காவிற்கு வருவோர் இவற்றால் பாதிப்பு அடையவும் வாய்ப்புள்ளது.

எனவே, பூங்காவில் மழைநீர் தேங்காத வகையில் போதிய வடிகால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்துவதுடன், கொன்றை மரத்தைச் சுற்றி கட்டுமானத்தை இலகுவாக்கி அந்த மரத்தை அழிவில் இருந்து காக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x