Published : 13 Jan 2014 09:41 AM
Last Updated : 13 Jan 2014 09:41 AM

என்னை கட்சியை விட்டு நீக்கமுடியாது: கொ.மு.க. பொதுச்செயலர் அறிவிப்பு

‘நான் எந்த இடத்திலும் பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை; என்னை யாரும் ஓய்வுபெறச் செய்ய முடியாது’ என்று கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமியும், ‘என்னை கட்சியைவிட்டு நீக்கவே முடியாது’ என்று கொமுக பொதுச்செயலாளர் ஜி.கே.நாகராஜும் தெரிவித்துள்ளனர்.

கொ.மு.க.விலிருந்து ஈஸ்வரன் பிரிந்து, கொ.ம.தே.க. தொடங்கி, பெருந்துறையில் மாநாடு நடத்திய வேளையில், கொ.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி என அறிவித்து 6 வேட்பாளர்கள் பெயரும் வெளியிடப்பட்டது.

வேட்பாளர்களை தலைவர் தன்னிச்சையாக அறிவித்தது சரியல்ல, நிர்வாகிகள் குழு கூடித்தான் முடிவு செய்யவேண்டும் என 51 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை உருவாக்கினார் இக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜி.கே.நாகராஜ். இக்கூட்டத்தில் பெஸ்ட் ராமசாமி பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நாகராஜ் தலைமையில் கூடிய 51 பேர் கொண்ட குழு, தலைவர் பெஸ்ட் ராமசாமி பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இச்செய்தி ‘தி இந்து’ நாளிதழில் பிரசுரமானது.

நீக்கப்பட்டவர் நாகராஜ்

இது தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் பெஸ்ட் ராமசாமி கூறியதாவது:

3 மாதங்களுக்கு முன்பு, நாகராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மாநில நிர்வாகிகள் 7 பேரையும், தலைவரான என்னையும் கலந்து பேசாமல், தன்னிச்சையாக பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வந்தார். எனவே, மற்ற நிர்வாகிகள் கூடி முடிவெடுத்து அவரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்து, அவருக்கு மட்டும் கடிதம் அனுப்பினோம்.

நான் ஓய்வுபெறுவதாக, இவர்கள் என்ன முடிவு எடுப்பது? அதை, நானே சொல்ல மாட்டேனா? என் மகன்கள் யாரும் இதைச் சொல்லவில்லை என்றார்.

நாகராஜ் கொமுகவில் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்டபோது, ‘இருக்கிறார். என்னை தொந்தரவு செஞ்சுட்டு’ என்றார் வேடிக்கையாக.

‘உண்மைதான்’

இது குறித்து நாகராஜிடம் விளக்கம் கேட்டோம். அவர் கூறியதாவது:

தலைவர் ஓய்வுபெறுகிறேன் என்று சொன்னது உண்மை. அவரது மகன்கள் கூட்டத்தில் வந்து சொன்னதும் உண்மை. 3 மாதத்துக்கு முன்பு மட்டுமல்ல; இப்போதும்கூட என்னை கட்சியை விட்டோ, பொறுப்பை விட்டோ தலைவரால்கூட நீக்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x