Published : 01 Jan 2017 04:46 PM
Last Updated : 01 Jan 2017 04:46 PM
திருநெல்வேலியிலுள்ள அரசு அருங்காட்சியகம் அறிவு கருவூலமாக திகழ்கிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த அருங்காட்சியகத்துக்கு இன்னும் அதிக வரவேற்பில்லை. அதற்கு, உரிய மேம்பாடு திட்டங்கள் இல்லாதது உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
பண்பாடு, கலை, வரலாறு, அறிவியல் வளங்களை கிராம மக்களும் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில், சென்னை, திருநெல்வேலி உட்பட 21 அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன.
திருநெல்வேலியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி அருங் காட்சியகம் தொடங்கப்பட்டது. பாளையங்கோட்டையில் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எதிரேயுள்ள மாநகராட்சியின் குடிநீர்த்தேக்க தொட்டியை அடுத்துள்ள குறுகிய இடத்தில் அருங்காட்சியகம் இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் கலை, பண்பாடு, நாகரீகம், வனச்செழுமை, சுற்றுலா, அகழாய்வு, சுதந்திர போராட்ட வரலாற்று செய்திகளை உள்ளடக்கியதாக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைத்த சமணர் திருவுருவ கற்சிற்பங்கள், திருமால், காளி, துர்க்கை, கருப்பசாமி சிலைகள், போர்வீரர்களின் நினைவு கற்கள், கல்வெட்டுகள் போன்றவை வெளி முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இளவேலங்கால் போர்
கி.பி. 1547-ம் ஆண்டு இளவேலங்கால் என்னுமிடத்தில் திருநெல்வேலிப் பெருமாள் என்னும் வெட்டும் பெருமாளும், தனது படையுடன் போரில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் பாண்டியர் படையைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக அவர்களின் வீரமும் புகழும் பெயரும் பொறிக்கப்பட்டு எடுக்கப்பட்ட 10 நடுகற்கள் இங்கு உள்ளன. இந்த சிற்பங்கள் அமைந்துள்ள தோட்டத்தின் நடுவே 18 அடி பிரமாண்ட டைனோசர் உருவம் அருங்காட்சியகத்துக்கு அழகு சேர்க்கிறது.
உலோகப் பொருட்கள்
அருங்காட்சியக அறிமுக கூடத்தில் நெல்லையப்பர் கோயில் கோபுரங்கள், சிற்பங்கள், இசைத்தூண்கள், கிருஷ்ணாபுரம் கோயில் தூண் சிற்பங்கள், திருநெல்வேலி மாவட்ட குகை கோயில்கள், சமணப் படுகைகள், குற்றால அருவிகள், தாமிரபரணி போன்றவற்றின் அழகிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்து உலோக கலைப்பொருட்களான வெற்றிலைப்பெட்டி, பாக்குவெட்டி, சுண்ணாம்பு குவளை, எச்சில் பனிக்கம், தொங்கும் பன்முக விளக்குகள், நறுமணம் புகைக்கும் குடுவைகள், அளவை, கூஜா, கெண்டி, அலங்கார விளக்குகள், மரப்பாச்சி பொம்மை அமைப்பில் பித்தளையிலான உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை கி.பி. 18-ம் நூற்றாண்டின் கலைப்பொருட்களாகும்.
நாணயவியல் கூடம்
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள நாணயங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றை உலோக நகல்கள் எடுத்து திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். சோழர், பாண்டியர், நாயக்கர், கிரேக்கர் போன்ற மன்னர் பரம்பரையினர் வெளியிட்ட நாணயங்களை பார்க்கும்போது பல வரலாற்று செய்திகள் தெரியவருகிறது.
பழங்கால நாணயங்கள்
கி.பி.14-15-ம் நூற்றாண்டில் மதுரை, ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சுந்தரதோருடையாள் மாவறின், வானதிராயன் காசுகள் திருநெல்வேலி பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இவர்கள் விஜயநகர மன்னர்களின் சமயமான வைணவத்தை தழுவியர்கள் என்பதால் இவர்களது காசுகளில் கருடனை பொறித்திருப்பதை காணமுடிகிறது.
மேலும் வட்டவடிவில் இலக்கமும் உயர்ந்த நிலையில் பல செப்புக்காசுகள் இப்பகுதியில் கிடைத்துள்ளன. சில காசுகளில் பக்கவாட்டில் ராஜ, ராஜ என்ற எழுத்து காணப்படுகிறது. இவை முதலாம் ராஜராஜனின் காசுகள் என்றும், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் கருதப்படுகிறது.
கற்கால கருவிகள்
கற்கால மக்கள் கல் ஆயுதங்களையும், மரம், எலும்பு, கொம்பு போன்ற இயற்கை பொருட்களையும் ஆயுதங்களாக உபயோகித்துள்ளனர். சாயர்புரத்தில் சேகரிக்கப்பட்ட நுண்ணிய கற்கால கருவிகளும், பழங்குடி மக்களின் கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்கால கருவிகளும் இங்கு உள்ளன. தெய்வ உருவங்களுடன் மரச்சிற்பங்கள், கி.16-ம் நூற்றாண்டை சேர்ந்த நர்த்தன கணேசர் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆதிச்சநல்லூர் தாழி
ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உருவ வடிவில் முட்டை வடிவமும், அகன்ற வாயும், குறுகிட அடிப்பாகமும் கொண்டவை. அவையும், விளாத்திகுளம் அருகே பசுவந்தனை கிராமத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி, திருவில்லிபுத்தூர், ராசபாளையத்தில் கிடைத்த தாழிகளையும் இங்கு பார்க்கலாம்.
தென்பாண்டி மண்டலத்துக்கு மட்டுமே உரித்தான வளரி எனப்படும் பூமராங் ஆயுதம், பழங்குடிகளின் போர்க்கருவியாகவும், வேட்டை கருவியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு இரும்பு, மரம், தந்தத்தால் செய்யப்பட்ட பூமராங் ஆயுதங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
பாண்டியர்களின் கோட்டை
அருங்காட்சியக தொழில்நுட்ப உதவியாளர் ஏ. பாலா கூறும்போது, ``பாளையங்கோட்டை அந்த காலத்தில் பாண்டிய மன்னர்களின் கோட்டையாக இருந்தது. இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் அந்த கோட்டையின் கிழக்கு வாசல், மேடை போலீஸ் நிலையம் அமைந்துள்ள இடம்தான் மேற்கு வாசல், பாளையங்கோட்டை பேருந்து நிலைய போக்குவரத்து சிக்னல் அருகே கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள இடம் தெற்கு வாசல், பாளையங்கோட்டை மார்க்கெட் வடக்கு வாசலாக இருந்துள்ளது. இந்த கோட்டை பகுதி 3 கி.மீ. சுற்றளவில் இருந்துள்ளது. அருங்காட்சியகம் அமைந்துள்ள கோட்டையில் உள்ள கருங்கல் தூண்கள் மற்றும் கூரை கற்களில் மீன் சிற்பங்கள் இருக்கின்றன. இந்த கோட்டை பகுதியை ஆங்கிலேயர் காலத்தில் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில்தான் ஊமைத்துரையை இங்கு அடைத்து வைத்திருந்தனர்.
தற்போது இந்த அருங்காட்சியகத்துக்கு நாளொன்றுக்கு 30 பேர் வரையில் வருகின்றனர். பள்ளி நாட்களில் மாணவ, மாணவியர் அதிகளவில் வருகின்றனர்” என்றார் அவர்.
காப்பாட்சியர் இல்லை
அருங்காட்சியகத்துக்கு நிரந்தர காப்பாட்சியரை அரசு நியமிக்கவில்லை. கன்னியாகுமரி அருங்காட்சிய காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளிதான் பொறுப்பு காப்பாட்சியராக உள்ளார். இரு தொழில்நுட்ப உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள் இருவர்தான் அருங்காட்சியகத்தை பராமரிப்பது, சுத்தப்படுத்துவது கட்டணம் வசூலிப்பது போன்ற அனைத்து பணிகளிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது.
பணிச்சுமையால் அருங்காட்சியக பராமரிப்பு கேள்வி குறியாகி வருகிறது. அருங்காட்சியக வளாகத்தில் சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள், சீஸா போன்றவை சேதமடைந்திருக்கின்றன. குடிநீர், கழிப்பிட வசதிகளும் இல்லை. 13,225 சதுரஅடி பரப்பில் அருங்காட்சியக கட்டுமானங்களும், சிலைகளும், பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 13,225 சதுர அடி பரப்பு புதர் மண்டியிருக்கிறது.
பெட்டிக்குள் புத்தகங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்று செழுமைக்கு ஆதாரமானவற்றை தேடிப்பிடித்து இங்கு கொண்டுவந்து காட்சிப்படுத்தினால் மேலும் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்று தகவல்கள் போன்ற அரிய புத்தகங்களும் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. ஆனால் அவற்றை இங்கு வருவோர் படிப்பதற்கு அளிப்பதில்லை. அவற்றில் சில புத்தகங்களை கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். அரிய புத்தகங்களை படித்துவிட்டு அவற்றை பாதுகாப்பாக திருப்பி தரும் வகையிலும் பார்வையாளர்கள் இல்லை. பணியாளர் பற்றாக்குறையால் இங்கு படிப்பகத்தை நடத்தவும் முடியவில்லை.
அருங்காட்சியகத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள இடம் வாகன நிறுத்துமிடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இதை தடுக்க, இந்த இடத்தை அருங்காட்சியகத்துக்கு வழங்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வ.உ.சி. இழுத்த செக்கு
காப்பாட்சியர் (பொறுப்பு) சிவ. சத்தியவள்ளி கூறும்போது, ``அருங்காட்சியகத்தின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களையும் அரசுக்கு கருத்துருவாக அனுப்பியுள்ளோம். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. இழுத்த செக்கு குறித்த புகைப்படம் அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த உண்மையான செக்கு தற்போது கோவை சிறையில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த செக்கை இங்கு கொண்டுவந்து அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து அரசுக்கு எழுதியிருக்கிறோம்.
அருங்காட்சியகத்தின் முன்புறமுள்ள இடம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இடத்தை வாகன நிறுத்தும் பகுதியாக மாற்றிவிடுகிறார்கள். இதனால் அருங்காட்சியகம் அமைந்துள்ளது வெளியே தெரியவில்லை. இந்த இடத்தை அருங்காட்சியகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சியிடம் கேட்டிருக்கிறோம்” என்றார் அவர்.
கட்டண விவரம்
அருங்காட்சியகத்தை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிடலாம். வெள்ளிக்கிழமை மற்றும் 2-ம் சனிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை தினங்கள் விடுமுறை நாட்களாகும். இந்த அருங்காட்சியகத்தை பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்வையிடலாம். மற்றபடி பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3, வெளிநாட்டவருக்கு ரூ.100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT