Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM
தமிழகம் கடந்த 3 ஆண்டுகளில் முக்கிய மாற்றங்களையும் பல்வேறு சாதனை களையும் கண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற எண்ணம் ஈடேறிவருகிறது. சரிநிகர் வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளித்து, சாதாரண மக்களும் தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியால் அதிக அளவில் பயன்பெறும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கான வழிவகைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்த நோக்கத்தை எட்டும் விதமாக, குறிப்பிட்ட துறைகளையும் பின்தங்கிய பகுதி களையும் இலக்காகக் கொண்டு, சிறப்பான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.
நீண்டகால பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நிலை நிறுத்தும் அடித்தளமாக விளங்கக் கூடிய சட்டம், ஒழுங்கு எந்தவித குறைபாடுமின்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே குற்றங்கள் குறைவாக நிகழும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவும் தொழில்அமைதி நிலவுவதாலும் முதலீடுகளைச் செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தொழில் துறையிலும் உற்பத்தித் துறையிலும் தமிழகத்தை உலகின் மையமாக மாற்றுவதற்கு தமிழக முதல்வர் உறுதியேற்றுள்ளார்.
தமிழகத்தின் பங்கு
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ‘தொலைநோக்குத் திட்டம் 2023’-ன் இரண்டாவது தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சியில், புத்துணர்வு பெற்ற இந்தியாவை உருவாக்க தொலைநோக்குத் திட்டங்களை வைத்திருப்பதாகவும், அந்த இலக்கினை அடைவதில் தமிழகம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொழில் துறையில் ரூ.5081 கோடி முதலீட்டுக்கான 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 16,282 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் வெளியிட்ட புதிய தொழில் கொள்கையால் 20 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் கொள் கையை வெளியிட்டுப் பேசிய முதல்வர் “தொழில்துறையில் புதிய சகாப்தம் படைத்து, உற்பத்தித் துறையில் உலகின் பெரிய மையமாக தமிழகம் உருவாவதற்கு இக்கொள்கை வழிவகுக்கும். உலக நாடுக ளுடன் தமிழகத்தை போட்டியிடச் செய்வதே தமது உயர்ந்த லட்சியம்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னணி மாநிலம்
“வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதிலும் முன்னோடியாக தமிழக முதல்வர் திகழ்கிறார்” என்று ஃபோர்டு நிறுவன தலைவர் மைக்கேல் போன்காம் பாராட்டி
யிருந்தார். அதற்கேற்ப, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதுடன் மட்டுமின்றி, தமிழ்நாடு தொழில்கொள்கை-2014, ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் கொள்கை-2014, தமிழ்நாடு உயிரிதொழில்நுட்பக் கொள்கை-2014 என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கொள்கை களையும் முதல்வர் வகுத்திருப்பது சிறப்பு.
தமிழகத்துக்கு வளமையும், தொழில் அமைப்புகளுக்கு நலமும் சேர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’-ன் இரண்டாவது தொகுப்பில், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கிலும், உற்பத்தித் துறையில் உயர்ந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.
மின்சாரம், போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தக கட்டமைப்பு வசதி மேம்பாடு, நகர்ப்புற சேவை மற்றும் கட்டமைப்பு வசதி மேம்பாடு, விவசாயம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் 217 உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுத் திட்டங்களே அவை.
தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பில், விவசாயத்துறையில் ரூ.1.21 லட்சம் கோடி (முதலாவது தொகுப்பில் ரூ.40 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முந்தைய தொலைநோக்குத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.30,000 கோடி முதலீட்டு இலக்கானது, ரூ.59,140 கோடியாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு முதல்வர் வெளியிட்ட ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’-ன் அடிப்படையில், முதலீடு
களை ஈர்க்கவும் துரிதப்படுத்தவும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் துறையில் சிறப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
தொழில் புரட்சி
வாகன உற்பத்தி, ரசாயனப் பொருட் கள், பெட்ரோலியப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், மின்னணு உற்பத்தி ஆகியவை மட்டுமின்றி புதிய தொழில் நுட்பங்களாகிய மென்பொருள் மற்றும் உயிரி தொழில்நுட்பங்களிலும் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிக முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை உறுதி செய்திடவும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
“நிச்சயமற்ற சர்வதேச பொருளாதாரச் சூழல், உள்நாட்டில் மந்தநிலை ஆகியவையே எனது அரசின் முன்புள்ள மிகப் பெரிய சவால். அவற்றை கடந்து பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம்” என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த லட்சியத்தில் உறுதிகொண்டு அளப்பரிய சாதனைகளைத் தொழில்துறையில் படைத்து வருகிறார். தொழில்துறையில் தமிழகம் புரட்சி செய்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
குஜராத்தை விட அதிக முதலீடு
இதுமட்டுமின்றி, தமிழகத்தில் மின்னணு தொழில்துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. மின்னணு வன்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தை வகிக் கிறது. இவ்வாறாக, சிறப்பான திட்டங்களால் தமிழகம் ஏற்றப்பாதையில் வெகுவேகமாக மற்ற மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வருகிறது.
மத்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, அதிகரிக்கும் முதலீடுகளில் குஜராத், மகாராஷ்டிரம் போன்ற வளர்ச்சி யடைந்த மாநிலங்களைக் காட்டிலும் 18.2 சதவீதம் அதிக முதலீடுகளை (2011-14) தமிழகம் ஈர்த்துள்ளதாக தெரிவித்திருப்பதே இதற்குச் சான்று.
தமிழக மக்கள் உயர்தரமான உள்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரத்துக்கான வழிவகைகள் ஆகியவற்றைப் பெற்று திருப்திகரமான வாழ்க்கையை நடத்தும் வகையில், தமிழகம் முதல் மாநிலமாக விளங்கும் என்றும் முதல்வர் உறுதிபடக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, புத்துணர்வு பெற்ற இந்தியாவை உருவாக்க தொலைநோக்குத் திட்டங்களை வைத்திருப்பதாகவும், அந்த இலக்கினை அடைவதில் தமிழகம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT