Published : 06 Jun 2016 08:29 AM
Last Updated : 06 Jun 2016 08:29 AM

மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஊழியர்கள் நேரத்துக்கு பணிக்கு வருவதால் புறநோயாளிகள் வருகை அதிகரிப்பு

வாட்ஸ்அப் கண்காணிப்பு திட்டத்துக்கு கைமேல் பலன்

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாட்ஸ்அப் கண்காணிப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டதை தொடர்ந்து, மருத்துவப் பணியாளர்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வந்து செல்கின்றனர். இதனால் புறநோயாளிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித் துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சி பராமரிப்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் பணியாளர்களின் பணி நேரம் காலை 8 முதல் மாலை 3 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலர்கள், காசநோய் திட்ட அலுவலர்கள் தாமதமாக வருவதாகவும், பணி முடியும் முன்பே கிளம்பிவிடுவதாகவும் பரவலாக புகார் எழுந்தது.

இதை தடுக்கும் நோக்கில், பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றனரா என வாட்ஸ்அப் மூலம் கண்காணிக்கும் சேவையை மாநகராட்சி சுகாதாரத் துறை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்படி, மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு, அதில் மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் என 30 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தினமும் தலா 2 சுகாதார நிலையங்களுக்கு காலை 8 மணிக்கு சென்று, அங்கு பணிக்கு வந்திருப்பவர்களை ஸ்மார்ட் போனில் படம் எடுத்து, வாட்ஸ்அப்பில் பதிவிட அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் நல்ல பலனளிக்கத் தொடங்கியுள்ளது. மருத்துவப் பணியாளர்கள், நேரத்தோடு வருவது உறுதி செய்யப்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘வாட்ஸ்அப் கண்காணிப்பு திட்டத்தால், மருத்துவ பணியாளர்கள் தற்போது குறித்த நேரத்துக்கு பணிக்கு வருகின்றனர். இதனால், பலரும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காலை 8 மணிக்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் புறநோயாளிகள் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அதே 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 3 லட்சம் பேர் அதிகமாக வந்துள்ளனர்’’ என்றனர்.

இதுதொடர்பாக கொடுங்கை யூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த ஒரு புறநோயாளியிடம் கேட்டதற்கு, ‘‘முன்பெல்லாம் பணியாளர்கள் எப்போது வருகிறார்கள், எப்போது போவார்கள் என்றே தெரியாது. இப்போது காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மருத்துவர்கள் இருப்பதை பார்க்கும்போது அதிசயமாக, ஆச்சர்யமாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x