Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
திருச்சியில் இதுவரை திமுக-வின் 4 மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ள நிலையில், இப்போது 5-வது மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி என்றாலே திருப்புமுனை என திமுக-வினர் கூறி வரும் நிலையில் இதற்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாடுகளைப் பற்றி பார்ப்போம்.
திருச்சியில் 1956, மே-யில் 4 நாட்கள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திமுக-வின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் 'தேர்தலில் போட்டியிடுவதா-வேண்டாமா' என்பது குறித்து கட்சியினரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிட ஆதரவளித்து 56,942வாக்குகளும், எதிர்ப்புத் தெரிவித்து 4,203 வாக்குகளும் பதிவாகின. இதன் பிறகே தி.மு.க தேர்தலில் போட்டியிடும் கட்சியாக மாறியது.
முதன்முதலில் திருப்புமுனை மாநாடு எனப் பெயரிடப்பட்ட மாநில மாநாடு, 1990, பிப்ரவரியில் மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இதையடுத்து சில மாதங்களில் தி.மு.க ஆட்சியை இழந்தது. பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இம்மாநாட்டின் 2-வது நாள் தனது பேச்சாற்றலால் பெரும் தொண்டர் படையை வசீகரித்த வைகோ மீது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறாமைகொள்ள காரணமாகவும் இம்மாநாடு அமைந்தது. திருச்சி கொட்டப்பட்டில் 1996, ஜனவரியில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நாளில் நடந்த
பிரமாண்ட பேரணியைப் பார்த்தமூப்பனார், அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் முடிவை எதிர்த்து காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்கினார்.
2006, மார்ச்சில் செம்பட்டு பகுதியில் நடைபெற்ற தி.மு.க மாநில மாநாட்டுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாநாட்டுக்கு வருவதற்குப் பதிலாக போயஸ் தோட்டத்துக்கு கூட்டணி பேச
வைகோ சென்றுவிட்ட தகவல் கேள்விப்பட்ட தி.மு.க தொண்டர்கள் மாநாட்டு முகப்பிலிருந்த வைகோவின் கட்-அவுட்டை அடித்து நொறுக்கினர். இந்தக் காட்சியைப் படமெடுக்க முயன்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். தலைவர்கள் தங்குவதற்கு ஆடம்பர அறைகள், செய்திகள் அனுப்ப தொலைநகல், தொலைபேசி- மின்னஞ்சல் வசதி கொண்டசெய்தியாளர் அரங்கம், தீப்பிடிக்காத தகரம் வேயப்பட்ட மேற்கூரை என பிரமாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெற்றது இந்த மாநாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT