Published : 22 Oct 2013 08:45 AM
Last Updated : 22 Oct 2013 08:45 AM
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் நீதிபதியாக பணியாற்ற விரும்பவில்லை என முன்னாள் நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா, கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி புதிய நீதிபதியை நியமிக்க கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எழுதப் போகும் நீதிபதி யார் என்ற கேள்வி சிறப்பு நீதிமன்ற வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.
கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா, கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதற்கு முன்னதாக, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, “வழக்கை விரைவாக முடிக்க நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என உச்ச நீதி மன்றத்தில் ஆகஸ்ட் 26- ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, “நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு சட்டத்தில் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது பற்றி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் அம்மாநில அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் “நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது” என ஆதாரங்களுடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குறிப்பிட்டு இருந்தார். அன்பழகனின் கடிதத்தால் நீதிபதி பாலகிருஷ்ணா மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நீதிபதி பாலகிருஷ்ணா, “கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்து வந்த எனது நற்பெயர், ஜெயலலிதா வழக்கை விசாரித்ததால் கெட்டுவிட்டது. எனது கண்ணியத்தின் மீதும் நேர்மையின் மீதும் திமுக சந்தேகம் எழுப்பி இருக்கிறது. திமுகவின் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா எனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். எனவே ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியாக மீண்டும் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. எனவே, எனக்கு பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்திலோ அல்லது தொழிலாளர் பிரிவு நீதிமன்றத்திலோ பணியாற்ற வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என கோரியுள்ளதாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஜெயசந்திரா, “உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வழிகாட்டுதலின்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் புதிய நீதிபதியின் பெயரை அறிவிப்போம்” என்றார்.
ஜெ. ஆஜராவாரா?
பொறுப்பு நீதிபதி முடி கவுடர் முன்னிலையில் இம்மாதம் 30-ம் தேதி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரனைக்கு வருகிறது. அப்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT