Published : 05 Jul 2016 02:06 PM
Last Updated : 05 Jul 2016 02:06 PM
ரயி்ல்வே திட்டங்களை திருவாரூருக்குப் பெற்றுத்தர அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டாததால் கீழத்தஞ்சை என்றழைக்கப்பட்ட திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணியிலும், முஸ்லிம்களுக்கு நாகூரிலும், இந்துக்களுக்கு திருநள்ளாறிலும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இருப்பது நாகை, காரைக்கால் மாவட்டங்களில்தான் என்றாலும், திருவாரூர் மாவட்டத்தைக் கடந்துதான் இங்கு செல்ல வேண்டும்.
இவை மட்டுமில்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் ஆலங்குடி குருபகவான், திருப்பாம்புரம் ராகு- கேது கோயில், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில் என ஏராளமான பரிகாரத்தலங்களும் உள்ளன.
திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களுக்கு தென் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வந்து செல்ல நேரடி ரயில் வசதி எதுவும் இல்லை. அதேபோல, இம்மாவட்டத்திலிருந்து வடமாவட்டங்கள், மேற்கு பகுதிகளுக்கு செல்லவும் போதிய ரயில் வசதிகள் இல்லை.
ரயில் சந்திப்பாக திருவாரூர் இருந்தும் ரயில் நிலையத்துக்கான தகுதிதான் தற்போது உள்ளது. இந்த வழித்தடத்தில் போதிய ரயில்கள் இயக்கப்படாததால், வருவாய் பெருக வழியில்லை. இதனால் திருவாரூர் சந்திப்பு, தகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
திருவாரூர் தனது சொந்த ஊர் என கூறும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மத்திய அரசிடமிருந்து தேவையான திட்டங்களை பெறகூடிய கூடியவருமான மு.கருணாநிதி தன்னுடைய சொந்த ஊரின் இந்த நிலை குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசியலில் பத்து ஆண்டுகள் திமுகவினர் அங்கம் வகித்தபோதும் திருவாரூருக்கு ரயில்வே திட்டங்கள் எதையும் பெற்றுத்தரவில்லை.
திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருந்தபோது தன்னுடைய மகன் எம்எல்ஏவாக உள்ள மன்னார்குடிக்கு சில ரயில் வசதிகளை கொண்டு வந்தார். அப்போது, கருணாநிதி பிறந்தஊரான திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி இடையே ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவித்தது இதுவரை அறிவிப்பாகவே மட்டுமே உள்ளது. திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் 2011-ல் இருந்து இன்றுவரை ஆமை வேகத்திலேயே உள்ளது.
அதேபோல, திருவாரூர் திமுக முக்கியத்துவம் பெற்ற பகுதி எனக் கருதி, அதிமுகவினரும் ரயில்வே திட்டங்களைப் பெற்றுத்தர ஆர்வம் காட்டுவதில்லை.
இதுகுறித்து ரயில், பேருந்து பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத் திருவாரூர் மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி கூறியபோது, “நாகை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்ல நேரடி ரயில் வசதி இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில், பட்ஜெட்டில் வேளாங்கண்ணிக்கு சென்னையிலிருந்து தனி ரயில் இயக்கப்படும் என அறிவித்தனர். ஆனால், கம்பன் ரயிலில் பாதி பெட்டிகளைப் பிரித்து பயன்படுத்துகின்றனர். மன்னார்குடி- சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் திருவாரூர் வழியாக செல்லவே முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர் வழியாக தஞ்சைக்கு காலையில் ஒரு ரயில், மதியம் ஒரு ரயில், மாலை இரண்டு என நான்கு ரயில்கள்தான் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் ரயில் வசதி கிடைக்காமல் தினமும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும். பாலக்காடு- திருச்சி பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். எர்ணாகுளம் விரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டிகள் இணைக்க வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் திட்டங்களையெல்லாம் பெற தமிழக எம்பிக்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே இயலும்” என்றார்.
திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு 2-வது எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாநிதி, இத்தொகுதி மக்களுக்காக மத்திய அரசிடம் இருந்து தேவையான ரயில் வசதிகளை பெற்றுத் தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறிலும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இருப்பது நாகை, காரைக்கால் மாவட்டங்களில்தான் என்றாலும், திருவாரூர் மாவட்டத்தைக் கடந்துதான் இங்கு செல்ல வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT