Published : 27 May 2017 10:47 AM
Last Updated : 27 May 2017 10:47 AM
திருநெல்வேலி அருகே இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குளங்களை தூர்வாரும் பணியில் களமிறங்கி இருக்கிறார்கள். இப்பணிக்கு அரசுத்துறைகள் கைகொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முழுக்க விவசாயத்தை நம்பியுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் மண்மேடிட்டு, மரம், செடி, புதர்கள் மண்டியிட்டு காணப்படுகின்றன. வரும் பருவமழைக்கு முன் அவற்றை தூர்வாரி செப்பனிட்டு, நீரைத் தேக்கி வைக்க தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அந்தந்த பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அரசுத் தரப்பில் குடிமராமத்து திட்டத்தில் குளங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அத்திட்டத்தின்கீழ் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இத் திட்டத்தின்கீழ் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களையும் சீரமைக்க முடியாத நிலையும் உள்ளது.
திருவண்ணாதபுரம் பொட்டல்
திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள திருவண்ணாதபுரம் பொட்டல் பகுதியில் தூர்ந்துபோயிருந்த 4 குளங்களையும் தூர்வாரி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால், குளங்களை தூர்வார எவ்வித நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை. இதனால், நேரடியாக தாங்களாகவே களத்தில் இறங்க இளைஞர்கள் திட்டமிட்டனர்.
களமிறங்கிய இளைஞர்கள்
பொட்டல் பகுதியிலுள்ள 15 ஏக்கர் பரப்பிலுள்ள 2 பெரிய மற்றும் 2 சிறிய குளங்களிலும் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி, அகற்றும் பணியில் இப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டனர். ஆனால், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி மிகவும் கடினமாக இருந்தது. மேலும் மரங்களை வேரோடு அப்புறப்படுத்தவும் முடியவில்லை. இதனால், ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு அமர்த்தி மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
இதற்காக, தாங்களாகவே முன்வந்து இளைஞர்கள் பணம் கொடுத்தனர். அதில், சேர்ந்த தொகையில் கடந்த 3 நாட்களாக இங்குள்ள சிறிய குளத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் செலவாகியிருக்கிறது. இப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் மேலும் 3 குளங்களை தூர்வார ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு அமர்த்த நிதி சேகரிக்க வேண்டிய கட்டாயம் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு அமர்த்த அரசுத்துறைகள் உதவினால் இளைஞர்களும், பொதுமக்களும் முழுஒத்துழைப்பு வழங்கி மீதமுள்ள குளங்களையும் தூர்வார முடியும் என்று, இப்பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் டி.சுரேஷ் தெரிவித்தார்.
3 குளங்கள் பாக்கி
குளத்தை தூர்வாரும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ள அவர் கூறும்போது, ``இப்பகுதியிலுள்ள படித்த இளைஞர்கள், நகர்ப்புறங்களில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், விவசாயம் செய்யும் இளைஞர்கள் என்று 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களால் முடிந்த தொகையை அளித்து ஒரு குளத்தை முடிந்தவரையில் தூர்வாரி முடித்திருக்கிறோம். மேலும் 3 குளங்களை தூர்வார வேண்டியிருக்கிறது. அரசு நடவடிக்கை எடுத்தால் குளங்களை நன்றாக ஆழப்படுத்தி புனரமைக்க முடியும்” என்றார் அவர்.
2 ஆண்டுகளாக பாதிப்பு
இப்பகுதியை சேர்ந்த கனகராஜ் கூறும்போது, ``பொட்டல் பகுதியிலுள்ள 4 குளங்களுக்கும் பாளையங் கால்வாயிலிருந்து தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த குளங்கள் மூலம் பொட்டல், வெள்ளக்கோயில், கீழநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக குளங்கள் பெருகாமல், விவசாயம் பொய்த்துவிட்டது. விவசாயிகள் கையில் காசில்லாத நிலையில், படித்து வேலைக்கு செல்லும் இளைஞர்கள் காசு சேகரித்து குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT