Published : 02 Jun 2017 08:58 AM
Last Updated : 02 Jun 2017 08:58 AM
தமிழகத்தில் ஏரி, கண்மாய்களில் விவசாயிகள் வண்டல் மண்ணை தூர் வாரி எடுத்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. விவசாயி கள் இலவசமாக ஏரிகளின் வண்டல் மண்ணை எடுத்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 40 பெரிய ஏரிகளிலும் சுமார் 1000 சிறு ஏரிகளிலும் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்டிகளில் விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்து பயனடைந்து வருகிறார்கள்.
தமிழக அரசு சமீபத்தில் குடிமராமத்து திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரு கிறது. தொடர்ந்து, ‘குடி மராமத்து திட்டப் பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் அளிக்கக் கூடாது; விவசாயிகளையே தூர் வாரி வண்டல் மண்ணை எடுத்துகொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன. இதற்காக ஏற்கெனவே அரசாணை இருந்த நிலை யிலும் தமிழக அரசு, ‘நன்செய் பயிரிடும் விவசாயிகள் ஏக்கருக்கு 25 டிராக்டர்கள் வண்டல் மண்ணும், புன்செய் பயிரிடும் விவசாயிகள் ஏக்கருக்கு 30 டிராக்டர்கள் வண்டல் மண்ணும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்தது.
இதற்கு முன்னதாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை இயக்கம் - தமிழ் காடு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பினர் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக ஏரிகளில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்வது குறித்து விவசாயி களிடம் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் புதுக்குறிச்சி ஏரியை விவசாயிகளே முழுமையாக தூர் வாரியதில் கடந்த சில மாதங்களில் அந்த ஏரிக்கு நீர் வரத்து கிடைத்தது.
தொடர்ந்து தமிழக அரசு இலவசமாக வண்டலை எடுத்துக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தினசரி சாரை சாரையாக சொந்த செலவில் டிராக்டர்களைச் கொண்டு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியை தூர் வாரி வண்டல் மண்ணை எடுத்துச் செல்கின்றனர்.
இதற்காக மனு பெறுவது, அனுமதி வழங்குவது போன்ற பணிகளை மேற் கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏரிகள் தூர் வாரப்படாததால் ஏரியில் தூர் ஏறியிருக்கும் அளவைப் பொறுத்து, விவசாயிகள் தங்களுக்கு தேவையான அளவு வண்டலை அள்ளிக்கொள்ளவும் அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான ரமேஷ் கருப்பையா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 70 பெரிய ஏரிகள் இருக்கின்றன. இவற்றில் 40 ஏரிகளில் இதுவரை 70 சதவீதம் வரை வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துள்ளார்கள். தவிர, பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டிலிருக்கும் சுமார் 1000 ஏரிகளிலும் கணிசமான அளவு வண்டல் மண் அள்ளப்பட்டு வருகிறது. ஏரியின் கரையை ஒட்டி வண்டல் மண்ணை எடுக்கக் கூடாது; கரையை சேதப்படுத்தக் கூடாது உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அதிகாரிகளும் தன்னார்வ அமைப்பினரும் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
ஏரியில் விவசாயிகள் தூர் வாரி வண்டலை எடுத்துக்கொள்வதை சாதாரண மான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. முன்பு விவசாயிகள் ஏரியிலி ருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுக்க முடியாது. சுமார் 40 ஆண்டுகளாக ஊரும் ஏரியும் அன்னியப்பட்டு ஏரிகள் அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்கள் கைகளில் சிக்கியிருந்தன. ஆனால், இன்று அவை விவசாயிகள் கைகளுக்கு வந்திருப்பதன் மூலம் தங்களது பாரம் பரிய குடிமராமத்து உரிமையை விவசாயிகள் மீட்டிருக்கிறார்கள். இனி ஏரியில் சட்டவிரோதமாக யாரேனும் கை வைத்தால் ஊர் மக்கள், விவசாயி கள் உரிமைக் குரல் எழுப்புவார்கள். இனி ஆண்டுதோறும் ஏரி தூர் வாரப் படும்.
இன்னொரு பக்கம் ஒவ்வொருவரது வயலிலும் சுமார் ஒரு அடி உயரம் வரை இந்த வளமான வண்டல் மண் கொட்டப்படுவதால் மண்வளம் பல மடங்கு அதிகரிக்கிறது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு செயற்கை உரம் போடத் தேவையில்லை. தொடர்ந்து நிலத்தை பராமரித்தால் சில களைக்கொல்லிகள் நீங்கலாக நிரந்தரமாக செயற்கை உரத்தை பயன்படுத்துவதையே தவிர்க்கலாம்.
வணிக பயன்பாட்டுக்கு இல்லை
பெரம்பலூர் தவிர தூத்துக்குடி மாவட்டம் உட்பட சில மாவட்டங்களிலும் கண்மாய்களை விவசாயிகளே தூர் வாரி வண்டலை எடுத்துவருகிறார்கள். மற்ற மாவட்டங்களிலும் ஏரிகளை விவசாயிகளே தூர் வாரி வண்டலை எடுக்க முன்வர வேண்டும். மேலும் அரசாங்கம் விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ள நிர்ணயித் துள்ள அளவுகளை தளர்த்த வேண்டும். ஏனெனில் வண்டல் மண்ணை விவசாயம், மண்பாண்டங்கள் தயாரிப்பு தவிர்த்து வேறு எவ்விதமான வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT