Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பண்ணை வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கும் பண்ணை வீட்டுக்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
காரைக்குடி - திருப்பத்தூர் ரோட்டில் உள்ள மானகிரியில் சிதம்பரத்தின் பண்ணை வீடு உள்ளது. பிப். 25-ல், இந்தப் பண்ணை வீட்டின் பின்புறக் கால்வாயில் நான்கு துண்டுப் பிரசுரங்களை கண்டெடுத்திருக்கிறது கியூ பிரிவு போலீஸ்.
‘தமிழர் விடுதலைப் படை’ என்கிற பெயர் தாங்கியிருந்த அந்தத் துண்டுப் பிரசுரங்களில், அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் இருந்ததால் விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டது போலீஸ். என்றபோதும் இதுகுறித்து கியூ பிரிவு போலீஸார் நாச்சியாபுரம் போலீஸில் முறைப்படி புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ’’அந்த துண்டுப் பிரசுரங்களில், ‘இந்திய அரசின் பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறோம். வால்மார்ட் உள்ளிட்ட அந்நிய நிறுவனங்களின் முதலீட்டை எதிர்ப்போம். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுப்போம். ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையைத் தடுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்’ இது போன்ற வாசகங்கள் இருந்தன’’ என்றனர்.
இதேபோன்ற துண்டுப் பிரசுரங்களளை நாராயணசாமி வீட்டுப் பகுதியிலிருந்தும் எடுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. துண்டுப் பிரசுரங்களில் சிதம்பரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வாசகங்கள் இருந்ததனால்தான் இதில் ரகசியம் காக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே மார்ச் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சிவகங்கை தொகுதியில் விழாக்களில் கலந்துகொண்ட சிதம்பரத் துக்கு, வழக்கத்தைவிட கூடுதலான போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
உள்ளூர் போலீஸ், மத்திய உளவுத் துறை, மாநில உளவுத் துறை, டெல்லி சிறப்புப் போலீஸார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸ் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சிதம்பரத்தை பின் தொடர்ந்தனர்.
இதனிடையே, 2-ம் தேதி காரைக்குடி பகுதியில் 5 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒத்துக்கொண்ட சிதம்பரம், அதில் 3 நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT