Last Updated : 11 Apr, 2017 04:18 PM

 

Published : 11 Apr 2017 04:18 PM
Last Updated : 11 Apr 2017 04:18 PM

வாக்குச்சீட்டுக்கு திரும்பலாமா?

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி அடையும் கட்சிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளில் சமீபத்திய ஒன்று மிண்ணனு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி என்பதாக உள்ளது.

எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது ஒரே வேட்பாளருக்கே செல்லும்படி சதி செய்யப்பட்டிருக்கிறது, செல்போன் அலைவரிசை மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பன உள்ளிட்ட விமர்சனங்கள் அதில் உள்ளடங்குகிறது.

அண்மையில் நடந்து முடிந்து உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு பிறகு இந்த குற்றச்சாட்டுகள் பரவலாக பேசப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தொடர்ந்து தற்போது 16 கட்சிகள் இந்த அணியில் சேர்ந்துள்ளன. இந்நிலையில், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே செல்வது அவசியம்தானா என்ற வாதவிவாதங்கள் எழுந்துள்ளன.

கட்சிகளின் கோரிக்கையை அலசுவதற்கு முன்னதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி முன்வைத்துள்ள கருத்தைப் பார்ப்போம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதை நிறுத்துவீர்:

கோபால்சாமி "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள் மிகவும் பாதுகாப்பானது. அதில் முறைகேடு செய்வது என்பது சாத்தியமற்றது. மொபைல் போன் சமிக்ஞைகள் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை மாற்றியமைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை.

நேர்மையான வெளிப்படையான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றமே உறுதி செய்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்னதாக அந்தந்தப் பகுதி தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் டம்மியாக வாக்குகளை பதிவு செய்து பரிசோதனைக்கு உட்படுத்தியே பின்னரே அவற்றை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கின்றனர்.

இத்தகைய விரிவான சோதனைகளுக்குப் பின்னரும்கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவது தோல்வியடைந்த வேட்பாளரின் நொண்டி சாக்காக மட்டும்தான் இருக்க முடியும்" இவ்வாறு கோபால்சாமி கூறியிருக்கிறார்.

ஜெ. எழுப்பிய முதல் எதிர்ப்பு:

கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

பலருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் தேர்தலில் பல குழப்பங்கள் ஏற்படும். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் முறைகேடு சாத்தியம் என்பது தொடர்பாக கணினி பொறியாளரிடம் பெறப்பட்ட தகவல்களையும் மனுவில் இணைத்திருந்தார்.

மேலும், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளாததை சுட்டிக் காட்டியிருந்தார்.

பாதி தொகுதியில் வாக்குச்சீட்டு முறை சரிவருமா?

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதை உறுதி செய்யும் வகையில் பாதி தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மீதி தொகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் வாக்குப்பதிவு நடத்தி, முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என காங்கிரஸ் முன்மொழிந்தது.

ஆனால், இவ்வாறாக பாதி தொகுதிகளில் மட்டும் வாக்குச்சீட்டு மீதி தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது நேர விரயம், மக்கள் மத்தியில் குழப்பம், தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் பளு ஆகியனவற்றுக்கே வழிவகுக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

மம்தாவின் எதிர்ப்பு:

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு எதிராக வலுவான குரல் எழுப்பியிருக்கிறார். முழுமையாக பழைய நடைமுறையான வாக்குச் சீட்டுக்கு மாறுவதே சிறந்தது என்பது அவரது வாதமாக இருக்கிறது.

16 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள நிலையில், தேர்தலில் தாங்கள் அளித்த வாக்கு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இது சாத்தியமில்லை. வாக்குச்சீட்டுகளில் மட்டுமே எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களால் அறிந்து கொள்ள முடியும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அவற்றுக்கு விடை கொடுத்து விட்டு, இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

கட்சிகளின் வாதத்துக்கு ஏற்ப மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மாறுவது என வைத்துக் கொள்வோம். அப்போது மட்டும் ஆளுங்கட்சியோ அல்லது மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியோ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குச்சீட்டுகளை மாற்றி வைக்கமுடியாதா அல்லது வாக்குச்சீட்டுகள் உள்ள பெட்டிகளையே மாற்றி வைக்க முடியாதா?

தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பயன்பாட்டில் இருக்கும் நிலையில், இயந்திரங்களை இன்னும் செம்மைப்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை வரவேற்கலாம். உதாரணத்துக்கு, வாக்காளரின் ஓட்டு பதிவானதை உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரம், இவிஎம் பயன்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கக்கூடும்.

அதைவிடுத்து, ஒரு தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்ட பின்னர் மீண்டும் பழைய முறைக்கு மாற வேண்டுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்கிறது என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும்.

வெறும் யூகத்தின் அடிப்படையிலும் மேற்கத்திய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நம்பவில்லை என்ற காரணத்தால் மட்டுமே மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவது தீர்வாகாது. தேர்தல் என்பது மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா. அதை குளறுபடிகள் இல்லாமல் சுமுகமாக நடத்தக் கோருவது வாக்காளர்கள், அரசியல் கட்சியினரின் உரிமை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு அத்தேர்தலை நியாயமாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதும் நிதர்சனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x