Published : 02 Jun 2017 10:52 AM
Last Updated : 02 Jun 2017 10:52 AM

இடிந்து விழும் நிலையில் கிளியூர் கல்லணை கால்வாய் பாலம்: அச்சத்துடன் கடந்து செல்லும் கிராம மக்கள்

திருச்சி திருவெறும்பூர் அருகே கிளியூரில் கல்லணைக் கால்வாய் குறுக்கே உள்ள பழமையான பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கும், அவர்களுக்குரிய விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கும் இடையே கல்லணைக் கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயை கடந்து செல்ல 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான வண்டிப் பாலம் உள்ளது. செங்கல் கட்டுமானத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு, மேலே கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 90 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், இந்தப் பாலத்தின் தூண்களில் ஏற்பட்ட விரிசல் காலப் போக்கில் பெரிதாகி, மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாலத்தின் மேற்பகுதியிலும் 2 அடி விட்டத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இதை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவெறும்பூர் வட்டக் குழுத் தலைவர் த.சங்கிலிமுத்து ‘தி இந்து’விடம் கூறியது:

இந்த பாலம் சேதமடைந்துள்ளது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பாலத்தின் அஸ்திவார தூண் உடைந்துள்ளதால், எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் மக்கள் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால் டிராக்டர் மற்றும் வண்டிகள் ஆற்றில் இறங்கிச் செல்கின்றன. தண்ணீர் வந்து விட்டால் எப்படி செல்வது என தெரியவில்லை.

பாலம் பழுதடைந்துள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால், பாலத்தை புதிதாக கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த பாலம் உடைந்து விட்டால் எங்களது வயல்களுக்கு, 9 கிலோ மீட்டர் சுற்றி கல்லணை வழியாகவோ அல்லது 3 கிலோ மீட்டர் சுற்றி இந்தளூர் வழியாகவோ தான் செல்ல வேண்டும் என்றார்.

இதுகுறித்து பொதுப் பணித்துறை வட்டாரத்தில் கேட்டபோது, “60 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் உள்ள இந்த பாலத்தை புதிதாக கட்ட ரூ.2.40 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்தவுடன் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” என தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x