Published : 15 Jan 2014 04:58 PM
Last Updated : 15 Jan 2014 04:58 PM
பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 9 பேருக்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை, இம்மாதம் 26-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. திருவள்ளுவர் விருது - கவிஞர் யூசி (தைவான்), தந்தை பெரியார் விருது - சுலோச்சனா சம்பத், அண்ணல் அம்பேத்கர் விருது - பேராயர் முனைவர் எம்.பிரகாஷ், பேரறிஞர் அண்ணா விருது - பண்ருட்டி ராமச்சந்திரன், பெருந்தலைவர் காமராசர் விருது - அய்யாறு வாண்டையார், மகாகவி பாரதியார் விருது - முனைவர் ஞானசம்பந்தன், பாவேந்தர் பாரதிதாசன் விருது - முனைவர் ராதா செல்லப்பன், தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது - ஜெ.அசோகமித்ரன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - பேராசிரியர் ஜெயதேவன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
திருவள்ளுவர் தினமான 15-ம் தேதி (புதன்கிழமை) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் விழாவில் மேற்கண்ட விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, விருது பெறுபவர்கள் முதல்வரின் கையால் விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரது பெயர்களிலான விருதுகளை வரும் 26-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா வழங்குவார்.
விருதுகளைப் பெறுவோர் தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றை முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.
திருவள்ளுவர் விருதை பெறும் கவிஞர் யூசி, தைவான் நாட்டிலிருந்து வருகிறார். திருவள்ளுவர் விருதை திருவள்ளுவர் தினத்தன்று வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே, புதன்கிழமை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் அவருக்கு மட்டும் திருவள்ளுவர் விருது வழங்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT