Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM
குந்தசப்பை கிராமத்துக்குள் புகுந்து மாட்டை அடித்துக் கொன்ற புலி, அதனை சாப்பிட மீண்டும் வராததால் புலியைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உதகையில் மூன்று பேரை அடித்துக் கொன்ற புலியைப் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடும் பணியில் கும்கி யானை, மோப்ப நாய்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆட்டோமெட்டிக் தெர்மல் சென்சார் கேமரா, யேர்லி வார்னிங் டிடெக்டிவ் மிஷின் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், குந்தசப்பை கிராமத்தில் பதுங்கியிருந்த புலி சிக்கவில்லை.
இந்நிலையில் அங்கிருந்து இடம் பெயர்ந்து திங்கள்கிழமை காலை கப்பச்சி கிராமத்தில் மாட்டை அடித்துக் கொன்று 100 மீட்டர் தொலைவில் உள்ள புதருக்கு இழுத்துச் சென்றுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
மாட்டின் இறைச்சியை சாப்பிட வரும் புலியை மயக்க ஊசி போட்டு பிடித்துவிடலாம் என நினைத்து இரு கூண்டுகள் அமைத்து இரவு முழுவதும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் காத்திருந்தனர். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை வரை மாட்டின் பக்கமே புலி வரவில்லை.
இதற்கிடையே, கப்பச்சி அருகேயுள்ள கம்பட்டி பகுதியில் புலியை பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர். இதனால், அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கப்பச்சி, கம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறித் தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித் துள்ளனர். புலி நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கு மாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் கல்வி பாதிப்பு
தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட சில பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
செய்முறை தேர்வுகளில்கூட கலந்துகொள்ள முடியாத நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். புலி விவகாரத்தால் இங்குள்ள 17 பள்ளிகளுக்கு வரும் 24-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே குந்தசப்பை, தும்மனட்டி மற்றும் கப்பச்சி உட்பட அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், புலியை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT