Published : 12 Nov 2013 09:29 AM
Last Updated : 12 Nov 2013 09:29 AM

மதுரையில் ரயில் மறியல்: வைகோ உள்பட மதிமுகவினர் கைது

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, வணிகர் சங்கங்கள், ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தில், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தந்தை பெரியார் தி.க., பெரியார் விடுதலைக் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம், மற்றும் மே 17 இயக்கம் உள்ளிட்ட 21 அமைப்புகள், கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

வைகோ கைது:

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளஎ வைகோ உள்ளிட்ட மதிமுக-வினர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ரயில் நிலையத்தில், சென்னை நோக்கிச் செல்லவிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மதிமுக-வினர் மறித்தனர். போராட்டக்காரர்கள், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வண்ணம் வைகை ரயில் முன் அமர்ந்தனர். ரயில்வே போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

ரயில் மறியல், காரணமாக காலை 6.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 7.20 மணிக்கு தான் புறப்பட்டது.

காங்கிரஸ் மீது தாக்கு:

லட்சக் கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதாக வைகோ தெரிவித்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் வண்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

போர்க்குற்றக் கரை படிந்த இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்த அறுகதை அற்றது. காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் இந்தியா இழந்த மரியாதையை மீட்டெடுக்க முடியும் என்றார்.

வலுவான எதிர்ப்பு:

இலங்கையில் வரும் 15ந் தேதி நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியாவிலிருந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் 4 பேர் கொண்ட குழு பங்கேற்கிறது. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், கடைகளை அடைக்க யாரையும் வற்புறுத்தக்கூடாது என்று அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான போராட்டங்களை, தடுக்க வேண்டுமென, போலீசாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இன்று பந்த்:

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இதுதொடர்பாக துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வணிகர்கள் ஆகியோரிடம் விநியோகித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், பார்வர்டு பிளாக், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் , மாணவர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மவுனம் காக்கும் கட்சிகள்:

போராட்டத்தில் பங்கேற்பது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை நேற்று (திங்கள்கிழமை) மாலை வரை முடிவுகளை அறிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x