Published : 27 May 2017 11:03 AM
Last Updated : 27 May 2017 11:03 AM

ஈளாடா தடுப்பணை தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம்: குடிநீர் பற்றாக்குறையால் சிரமப்படும் மக்கள்

ஈளாடா தடுப்பணை தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், கோத்தகிரி நகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகருக்கு முக்கிய நீர் ஆதாரமாக ஈளாடா தடுப்பணை விளங்குகிறது. இங்கிருந்துதான் நகரில் உள்ள 8 வார்டுகளுக்கு, பேரூராட்சி நிர்வாகம் மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தடுப்பணையில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர், புதூர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து ராம்சந்த் தொட்டியில் சேமிக்கப்பட்டு, நகரின் தாழ்வான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக நகரில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை அதிகரித்து வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகித்தாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. குடியிருப்புகள் பெருகிவிட்டதால், தண்ணீர் பற்றாக்குறைத் தீர்க்க முடியாத சூழல் நிலவுகிறது.

இதுதவிர, நகரப் பகுதியில் குடியிருப்புகள் என்ற பெயரில், வர்த்தக ரீதியாக செயல்படும் காட்டேஜ்கள் மற்றும் சொகுசு பங்களாக்களுக்கு ஈளாடாவில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வழக்கத்துக்கு மாறாக, நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கோத்தகிரி பகுதி மக்கள் பணம் கொடுத்து, தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ஈளாடா அணையைத் தூர்வார ரூ.20 லட்சம், தடுப்புச்சுவர் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம் தடுப்பணை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், ஓரிரு நாட்களிலேயே மழை பெய்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

தற்போது, தூர்வார ஏதுவான சூழல் நில வும் நிலையிலும், பணி முழுமை பெறாமல் உள்ளதால் நிர்ணயித்த அளவு வரை அணை யைத் தூர்வார முடியவில்லை. இதுதவிர, மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க அணையைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான பணியும் தொடங்கப்படவிடல்லை.

இதனால், இனிவரும் மழைக் காலங்களி லும் அணையில் தண்ணீரை முழுமையாகச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே, அணையை தூர்வாரும் பணியை நிறைவு செய்வதற்கான நடவடிக்கையை சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக கோத்தகிரி பேரூராட்சி பொறியாளர் கணேசன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஈளாடா தடுப்பணையை தூர்வாரவும், தடுப்புச் சுவர் கட்டவும் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பணை 4800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 3 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன.

கோடை மழை காரணமாக, தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, ஒரு வார காலத்தில் தூர்வாரும் பணி நிறைவடையும். அதன்பிறகு, குடிநீர் விநியோகம் தொடங்கப்படும். 60 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுமானப் பணி, பின்னர் தொடங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x