Published : 30 Dec 2013 12:00 AM Last Updated : 30 Dec 2013 12:00 AM
மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி: இல.கணேசன்
நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் இல.கணேசன் கோவையில் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆம் ஆத்மிக்கு தேர்தல் செலவுக்கு அமெரிக்க கம்பெனியே பணம் தந்துள்ளது. கெஜ்ரிவால் அமெரிக்காவின் ஆதரவுடன், கூடங்குளம் போராட் டத்தை முன்னின்று நடத்திய உதயகுமாருக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் என்றார்.
பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு இல.கணேசன் பதில் அளித்தார்.
தமிழகத்தில் யாருடன் கூட்டணி?
தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று அணி அமைக்க சில கட்சிகள் எங்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணுகி வருகின்றன. நாங்களும் சில கட்சிகளை அணுகி வருகிறோம். நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்ற ஒப்பந்தத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களைக் கூட்டணியில் சேர்ப்பது என்று தெளிவாக சொல்லிவிட்டோம். அவர்களும் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்து சொல்வதாக சொல்லியிருக்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க.வில் நீங்கள் தி.மு.க கூட்டணியிலும், ஹெச்.ராஜா, சி.பி.ஆர். போன்றவர்கள் அ.தி.மு.க கூட்டணியிலும், பொன் ராதாகிருஷ்ணன் தனித்தும் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாகவும், அதனாலேயே பெரிய கட்சிகள் கூட்டணி என்பது தமிழகத்தில் இழுபறி நிலையில் இருக்கிறது என்றும் உட்கட்சியில் அதிருப்தி உள்ளதே?
நல்ல கற்பனை. இது சிறுகதை, நாவல் எழுத உதவலாம். நாங்கள் அண்மையில் கூடிய கட்சி செயற் குழு கூட்டத்தில் தனித்தனியாக ஒவ்வொரு நிர்வாகியையும் கலந்தாலோசித்து எடுத்த முடிவு இது. மாற்று அணி உருவாக்கு வது என்ற முடிவில் அத்தனை பேரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி பற்றி…?
நடக்கப்போவது மக்களவைத் தேர்தல். மாநில அரசியலுக்குள் புக விரும்பவில்லை. இந்த தேர்தல் நரேந்திரமோடிக்கும் ராகுலுக்கும் நடக்கும் போட்டி என்றார்.
WRITE A COMMENT