Published : 06 Oct 2014 10:53 AM
Last Updated : 06 Oct 2014 10:53 AM
தமிழகத்தில் ஆட்டு இறைச்சிக்கு இணையாக நாட்டுக் கோழிகளின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இறைச்சிக் கடைகளில் கலப்பின கம்பெனி நாட்டுக் கோழிகளை வியாபாரிகள் நாட்டுக் கோழி என போலியாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக கால்நடை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கிராமங்களில் வீட்டின் முற்றத்தில் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகள், இன்று, மிகப்பெரிய பண்ணைத் தொழிலாக உருவெடுத்து வருகிறது. பிராய்லர் கோழியைவிட, நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையும், மணமும் அதிகம். இதனால் அசைவப் பிரியர்கள் நாட்டுக்கோழியை விரும்பி
சாப்பிடுகின்றனர். மேலும் பண்ணைகளில் பிராய்லர் கோழி குறுகிய காலத்தில் எடை அதிகரிக்க அவற் றுக்கு ரசாயன ஊசி போட்டு, மாத்திரை வழங்குவதாகவும் புகார் உள்ளது. இதனால் பிராய்லர் கோழியை வாங்குவதில் நுகர்வோரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
நாட்டுக் கோழிகள் கிடைப்பது சுலபமல்ல என்பதால், ஆட்டு இறைச்சிக்கு இணையாக நாட்டுக் கோழிகளின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமத்தில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை விற்பதற்கு அய்யலூர், வடமதுரை, சிலுவத்தூர், நத்தம் உள்ளிட்ட இடங்களில் தனியாக நாட்டுக்கோழி சந்தைகள் செயல்படுகின்றன. கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட வியாபாரிகள், இந்த சந்தைகளுக்கு வந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது நாட்டுக்கோழி இறைச்சிக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி, கூடுதல் விலை உயர்வு போன்றவற்றால், இறைச்சிக் கடைகளில் நாட்டுக் கோழிகளைபோல காணப்படும் கலப்பின நாட்டுக் கோழிகளை, வியாபாரிகள் நாட்டுக்கோழி என போலியாக விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் எஸ்.பீர்முகம்மது ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நாட்டுக்கோழிகள், மண்ணைக் கிளறி இயற்கையாக வளரும் புழு, பூச்சிகளை சாப்பிடும். கரையான்களை விரும்பிச் சாப்பிடும். இரை தேடும்போது நாட்டுக்கோழிகள் ஒவ்வொரு முறையும் கால்களை உரசி உரசி இரையை சாப்பிடுவதால் இவற்றின் இறைச்சி சுவையாகவும், புரதச் சத்தும் இயற்கையாகக் கூடுகிறது. கலப்பின நாட்டுக் கோழிகளில் இந்தச் சுவை இருக்காது. அதனால், இறைச்சிப் பிரியர்கள் கலப்பின நாட்டுக்கோழிகளை விரும்புவதில்லை.
இறைச்சிக் கோழியை மற்ற நாட்டுக் கோழிகளுடன் கலந்து, கலப்பின நாட்டுக்கோழி உருவாக்கப்படுகிறது. இதுவும் இறைச்சிக் கோழியை போன்றதுதான். முட்டையிடவும், இறைச்சிக்கும் பயன்படுத்தலாம். கலப்பின நாட்டுக் கோழிகள் பார்ப்பதற்கு நாட்டுக்கோழியை போலவே காணப்படும். பொதுமக்களால், இவற்றை கண்டுபிடிக்க முடியாது.
கலப்பின நாட்டுக்கோழிகளின் கால்கள் தடிமனாக காணப்படும். அலகு வெட்டப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் வைத்துதான், கலப்பின நாட்டுக்கோழிகள் எனக் கண்டறியமுடியும்.
நாட்டுக் கோழியின் இறைச்சி மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். கலப்பின நாட்டுக் கோழியின் இறைச்சியை நீண்ட நேரம் வேகவைக்க வேண்டும். கடிக்க கடிக்க சவ்வு போல் இருக்கும். எளிதில் அரைபடாது. சுவையும் இருக்காது. பண்ணைகளில் கலப்பின நாட்டுக்கோழிகள் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த கலப்பின நாட்டுக்கோழிகளை வாங்கும் வியாபாரிகள், இறைச்சிக் கடைகளில் கிலோ 300 ரூபாய்க்கு நாட்டுக்கோழிகள் என ஏமாற்றி விற்கின்றனர். அறியாமையால் மக்களும் வாங்கி விடுகின்றனர். நாட்டுக் கோழிகளை வாங்கும்போது, அவற்றின் கால், அலகு உள்ளிட்ட அடையாளங்களை பார்த்து வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT