Published : 09 Mar 2017 08:26 AM
Last Updated : 09 Mar 2017 08:26 AM
தமிழக மீனவர் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கிடைத்த குண்டை வைத்தே அது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அத்துடன் எல்லை தாண்டும் மீனவர்களை சுடும் அதிகாரம் எந்த நாட்டுக்கும் கிடையாது என இந்தியக் கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடந்த திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இத்தாக்குதலில் தமிழக மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். தமிழக மீனவர் கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இலங்கை கடற்படை மறுத்துள்ளது. ஆனால், உயிரிழந்த மீனவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள குண்டை வைத்து அது எந்த நாட்டினர் பயன் படுத்துவது என்பதை கண்டுபிடிக்கலாம் என இந்தியக் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து, அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பொதுவாக கடல் பகுதியில் எல்லையை வரையறுத்துக் கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு எங்கு அதிகளவில் மீன்கள் கிடைக்கின்றனவோ அங்கு சென்று மீன்பிடிப்பார்கள். மீனவர்களுக்கு கடல் எல்லை என்பதே கிடையாது. அத்துடன் பரந்து விரிந்துள்ள கடல் பகுதியில் எல்லையையும் குறிப்பிட்டு வரையறுக்க முடியாது.
பொதுவாக, மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் மற்ற நாட்டு கடலோர பாதுகாப்புப் படையினர் அவர்களை அங்கிருந்து துரத்தி அவர்களுடைய நாட்டு எல்லைக்குள் அனுப்பிவிடுவர். உதாரணமாக, குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வருவார்கள். அவர்களை இந்தியக் கடலோர காவல் படையினர் அந்நாட்டு எல்லைக்குள் துரத்திவிடுவர். இந்தியக் கடலோர காவல் படையின் எச்சரிக்கையை பலமுறை மீறி அவர்கள் வந்தால் அப்போது அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம்.
பின்னர் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்களை விடுதலை செய்வோம். அப்போதுகூட அவர்கள் மீது நாங்கள் எவ்வித தாக்குதலையும் நடத்த மாட்டோம்.
தற்போது இலங்கை கடற்படை நடத்தி யுள்ள தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக் கது. குறிப்பாக, அவர்களுக்கு சுடுவதற் கான அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும், இச்சம்பவத்தை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரி ழந்த மீனவரின் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள குண்டு நமக்கு ஒரு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. இந்தக் குண்டை பரிசோதித்து பார்த்தால் அது எந்த நாட்டில் பயன்படுத்தப்படும் குண்டு எனக் கண்டுபிடித்துவிட முடியும்.
தமிழக கடலோர பாதுகாப்பு படை இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் இக்குண்டை பரிசோதனை செய்தால் இதற்கான விடை கிடைக்கும். மேலும், சம்பவம் நடந்த தினத்தன்று எந்தக் கப்பல் இந்தியக் கடலோர பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொண்டது என்ற விவரம் இலங்கை கடற்படையிடம் இருக்கும்.
தற்போது இப்பிரச்சினை பூதாகரமாக கிளம்பியுள்ளதால் இந்த ஆதாரங்களை மறைக்கும் முயற்சியில் அந்நாட்டு கடற்படை ஈடுபடும்.
எனவே, இப்பிரச்சினையில் இந்திய அரசு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறதோ அதைப் பொறுத்து அந்நாடு ஆதாரங்களை மறைக்கும் முயற்சியில் இறங்காது. அத்துடன் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவும் அச்சப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
எல்லை தாண்டுவதை ஜிபிஎஸ் கருவி தடுக்குமா?
அரசு சார்பில் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ஜிபிஎஸ் கருவி தொடர்பாக, சென்னை- செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகி வீரப்பனிடம் கேட்டபோது, “அரசு சார்பில் சிறிய விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்கப்பட்டன. அதைக் கொண்டு மீனவர்கள், அட்ச ரேகை, பூமத்திய ரேகை அடிப்படையில் அவர்கள் இருக்கும் இடம், எத்தனை கடல் மைல் தொலைவில் இருக்கிறோம், கரை சென்று சேர ஆகும் நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்வார்கள். மேலும், அது எல்லை தாண்டுவதை சமிக்ஞை மூலம் தெரிவிக்கும். அது மீனவர்களுக்கு பயனுள்ள வகையில்தான் உள்ளது. ஆனால் அந்த கருவிகள் அனைத்து மீனவர்களுக்கும் வழங்கப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT