Published : 20 Feb 2017 01:46 PM
Last Updated : 20 Feb 2017 01:46 PM

எதிர்ப்பு எம்எல்ஏ.க்களை அதிமுக தகுதியிழப்பு செய்ய முடியாதது ஏன்?

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்களை அதிமுக தகுதி இழப்பு செய்ய முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்க, பிஆர்ஜி அருண் குமார் என்ற எம்.எல்.ஏ. வாக்கெடுப்பையே புறக்கணித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பாண்டியராஜன் ஆகியோர் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர் என்றாலும் இதனை அவைத் தலைவருக்கு முறையாக தகவல் அளித்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யாததால் இவர்களும் அதிமுக எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்பட்டனர்.

இந்நிலையில் இந்த 12 எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்புச் செய்ய அதிமுக நெருக்கடி கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்களை தகுதியிழப்பு செய்தால் இவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும், இதோடு ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கான மறுதேர்தலும் உள்ளது.

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியரும் அரசியல் வர்ணனையாளருமான பி.ராமஜெயம் கூறும்போது, “அதிமுக இந்த விவகாரத்தை எச்சரிக்கையுடனேயே அணுகும். அதிமுகவுக்கு மக்கள் எதிர்ப்பு அதிகமுள்ளது. கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்தால் அந்தத் தொகுதிகளில் புதியவர்கள் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகிவிடும். இதனையும் மீறி தகுதியிழப்புக்கு நெருக்கடி கொடுத்து அதில் அதிமுக சாதிக்க முடிகிறது ஆனால் தேர்தலில் அத்தொகுதிகளில் திமுக வெற்றி பெறுகிறது என்று வைத்துக் கொண்டால் திமுக-வின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், இது தற்போதைய அரசின் பெரும்பான்மைக்கு சவாலாக அமைந்து விடும்.

உள்ளாட்சி தேர்தலை ஆளும் கட்சி குறிவைக்கலாம், அதுவும் கூட மக்கள் கோபம் குறையும் வரையில் ஒத்திவைக்கவே ஆளும் கட்சி முடிவெடுக்கும்” என்றார்.

அதிமுக-வைச் சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, “கட்சித் தாவல் தடைச் சட்டம் இந்த எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது பாய வாய்ப்பில்லை காரணம் அவர்கள் வேறு கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை. எனவே கட்சித் தலைமை சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்த பிறகே இதில் முடிவெடுக்கும்” என்றார்.

மேலும், ஏன் எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய போது, “2 எம்.எல்.ஏ.க்களை மட்டும் நீக்கி மற்றவர்களை நீக்காததற்கு கட்சி இன்னமும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவே அர்த்தம். மீதமுள்ள இந்த எம்.எல்.ஏ.க்களை மன்னிப்பதில் கட்சிக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x